12/01/2024 (1042)
அன்பிற்கினியவர்களுக்கு:
இன்னா செய்யாமை என்றால் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமை. சரி, இதை எங்கிருந்து தொடங்குவது? இந்த வினாவிற்கு விடை சொல்கிறார் வரும் குறளில்.
மனத்தில் இருந்து தொடங்குங்கள் என்கிறார்.
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை. – 317; - இன்னா செய்யாமை
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் = எவ்வளவு சிறிய தீய எண்ணமாக இருந்தாலும், எக்காலத்திலும், எந்த உயிராக இருப்பினும்; மனத்தானாம் மாணா செய்யாமை = மனத்தில் பிற உயிர்களைக் குறித்துத் தீய எண்ணங்களை எண்ணாமல் இருப்பது தலையானது.
எவ்வளவு சிறிய தீய எண்ணமாக இருந்தாலும், எக்காலத்திலும், எந்த உயிராக இருப்பினும், மனத்தில் பிற உயிர்களைக் குறித்துத் தீய எண்ணங்களை எண்ணாமல் இருப்பது தலையானது.
தீய எண்ணங்களை மனத்திலேயே தவிர்த்துவிட்டால் சொல்லால், செயலால் அவை மாற்றம் பெறாது என்பது திண்ணம்.
முன்னர் நாம் ஒருவர்க்குச் செய்யக் கூடாததைச் செய்திருந்தால், பின்னர் நமக்கும் கொடுமைகள் தாமாகவே நிகழும் என்றார். காண்க 11/11/2023. மீள்பார்வைக்காக:
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும். - 319; - இன்னாசெய்யாமை
இன்னா செய்யாமைக்கு முடிவுரையாகத் துன்பம் செய்தால் துன்பம் விளையும்; தமக்குத் துன்பங்கள் சூழக்கூடாது என்பவர்கள் பிற உயிர்க்குத் துன்பம் செய்வதைத் தவிர்க்க என்கிறார்.
நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர். – 320; இன்னா செய்யாமை
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் = ஒருவர்க்குப் பெரும்பாலானத் துன்பங்கள் முன்னர் தாம் செய்த தீவினைகளாலே வந்து சேரும்; நோய் இன்மை வேண்டுபவர் நோய் செய்யார் = தமக்குத் துன்பங்கள் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் பிற உயிர்களுக்குத் துன்பங்களைச் செய்யார்.
ஒருவர்க்குப் பெரும்பாலானத் துன்பங்கள் முன்னர் தாம் செய்த தீவினைகளாலே வந்து சேரும். எனவே, தமக்குத் துன்பங்கள் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் பிற உயிர்களுக்குத் துன்பங்களைச் செய்யார்.
மனம் மொழி மெய்களால் பிற உயிர்க்குத் துன்பம் செய்யாமை நலம் என்று இந்த அதிகாரத்தை முடிக்கிறார்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Thought feeling word behaviour link...Karma Palan ..causation theory in these thirukkurals very well explained.