top of page
Search

எனைத்தொன் றினிதேகாண் ... 1202, 1203, 1204, 12/03/2024

12/03/2024 (1102)

அன்பிற்கினியவர்களுக்கு:

கள்ளினும் காமம் இனிதென்றான். ஏதேதோ நினைந்து குழம்புவதைக் காட்டிலும், நாங்கள் ஒட்டி உறவாடிய காலத்தை நினைத்தால், இந்தப் பிரிவிலும் மகிழ்ச்சி பிறக்கத்தான் செய்கிறது என்கிறான்.

 

எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்

நினைப்ப வருவதொன் றில். – 1202; - நினைந்தவர் புலம்பல்

 

எனைத்து ஒன்று இனிதே காண் காமம் = கூடி இருந்த போதும், இப்போது பிரிந்து இருக்கும் இந்த நிலையிலும் நினைக்கும் போதும் இனிமையையே தருவது அன்பு ஒன்றே; தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல் = அதைப் போல காதலில் வீழ்ந்தவர் நினைக்கும் போதே இன்பத்தைத் தருவது வேறு ஒன்றும் இல்லை.

 

கூடி இருந்த போதும், இப்போது பிரிந்து இருக்கும் இந்த நிலையிலும், அதைக் குறித்து நினைக்கும் போதும், இனிமையைத் தருவது அன்பு ஒன்றே. அதைப் போல காதலில் வீழ்ந்தவர் நினைக்கும் போதே இன்பத்தைத் தருவது வேறு ஒன்றும் இல்லை.

 

நினைவோ ஒரு பறவை

விரிக்கும் தன் சிறகை

பறக்கும் அது கலக்கும் தன் உறவை … கவிஞர் வாலி, சிகப்பு ரோஜாக்கள், 1978

 

அவளின் நினைப்பு பல மாயத்தை விளைவிக்கும். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் (குறள் – 71;  காண்க - 03/03/2021) என்கிறான்.

 

இவ்வாறு இவன் அவளை நினைத்து தன்னை நெறிப்படுத்திக் கொள்வது அவளுக்கு உள்ளுணர்வாக உணர்கிறாள். இருந்தாலும், வழக்கம் போல, அதிலும் அவளுக்கு ஒரு சந்தேகம் கூடவே தொற்றிக் கொள்கிறது.

 

அவளுக்குத் தும்மல் வருவது போல இருக்கிறதாம். ஆனால், வராமல் படுத்துகிறதாம். அதை அப்படியே காட்சிப்படுத்தி அவளின் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள்.

 

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்

சினைப்பது போன்று கெடும். – 1203; - நினைந்தவர் புலம்பல்

 

சினைப்பது = எழும்புவது; தும்மல் சினைப்பது போன்று கெடும் = தும்மல் வருவது போல இருக்கிறது. ஆனால் தும்ம முடியாமல் தவிக்கிறேன்; நினைப்பவர் போன்று நினையார் கொல் = அதற்குக் காரணம், என்னவர் என்னை நினைப்பது போல நினையாமல் இருக்கிறாரோ?

 

தும்மல் வருவது போல இருக்கிறது. ஆனால் தும்ம முடியாமல் தவிக்கிறேன். அதற்குக் காரணம், என்னவர் என்னை நினைப்பது போல நினையாமல் இருக்கிறாரோ?

 

அவள்: என் நெஞ்சம் முழுவதும் அவர்தாம். அதுபோல, அவர் நெஞ்சில் நான் இருக்கிறேனா என்ற கேள்வியை எழுப்புகிறாள்.

 

யாமும் உளேங்கொல் அவர் நெஞ்சத் தெந்நெஞ்சத்

தோஒ உளரே அவர். – 1204; - நினைந்தவர் புலம்பல்

 

ஓஒ எம் நெஞ்சத்து உளரே அவர் = ஓஒ, என் நெஞ்சத்தில் நீக்கமற நிறைந்திருப்பவர் அவரே; யாமும் உளேம் கொல் அவர் நெஞ்சத்து = அதே போல நானும் அவர் நெஞ்சத்தில் நிறைந்து இருப்பேனா?

 

ஓஒ, என் நெஞ்சத்தில் நீக்கமற நிறைந்திருப்பவர் அவரே. அதே போல நானும் அவர் நெஞ்சத்தில் நிறைந்து இருப்பேனா?

 

நீண்ட நெடிய தொடரைப் போன்று அமைத்துள்ளார் நம் பேராசான். வாழிய நலம்.

 

மீண்டும் சந்திப்போம், நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page