13/01/2022 (322)
முரண்பட்டப் பொருளைத்தரும் சில சொற்கள் இருக்கின்றன. இதை ஆங்கிலத்தில் contronym என்பார்கள்.
உதாரணத்திற்கு: overlook : Parents overlook our progress = பெற்றோர்கள் எங்கள் முன்னேற்றத்தைக் கண்கானிக்கிறார்கள்.
Parents often overlook our errors = பெற்றோர்கள் பெரும்பாலும் நம் தவறுகளை கவனிக்காமல் விடுகிறார்கள்
மேலும் பல ஆங்கிலச் சொற்கள்: to sanction, to peruse, to enjoin, to screen …
தமிழில் அது போன்ற ஒரு சொல்லை நம் பேராசான் குறள் 820ல் காட்டித் தருகிறார்.
அது தான் ‘ஓம்பல்’. ஓம்பல் என்றால் போற்றுதல், பாதுகாத்தல் என்று பொதுவாக பொருள். நாம் பார்த்த ஒரு குறள்:
“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.” --- குறள் 43; அதிகாரம் - இல்வாழ்க்கை
வரும் குறளில் ‘தவிர்த்தல்’ என்றப் பொருளில் பயன்படுத்துகிறார்.
“எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.” --- குறள் 820; அதிகாரம் – தீ நட்பு
மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு = தனியாக இருக்கும் போது நட்பு போல பாராட்டி, பலரோடு கூடி இருக்கும் போது பழிப்பவர்களின் தொடர்பு; எனைத்தும் குறுகுதல் ஓம்பல் = எவ்வளவு சிறிய தொடர்பாக இருப்பினும் அதைத் தவிர்க்க.
மேற்கண்ட குறளில் ‘ஓம்பல்’ என்ற சொல் தவிர்த்தல் என்ற பொருளில் வருகிறது.
இது போன்று, தமிழில் உள்ள முரண் சொற்களை உங்களுக்குத் தெரிந்தால் பகிரவும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments