21/07/2023 (869)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
படை மாட்சிக்குப் பிறகு படைச் செருக்கைப் பற்றி சொல்கிறார். படைக்குச் செருக்கு இருக்க வேண்டும்!
எங்கள் தலைவரை தயவு செய்து பகைத்து எதிர் நிற்காதீர்கள் ...
ஏன் நிற்க முடியாதா?
முடியும், முடியும். ஆனால் எப்படித் தெரியுமா நிற்பீர்கள், நடு கல்லாய் மயானத்தில்தான் நிற்பீர்கள்!
வாள் சண்டைக்கு முன் ஒரு உளவியல் சண்டை முக்கியம். எதிராளியின் மனத்தில் ஒரு கிலியை ஏற்படுத்த வேண்டும்.
தான, சாம, பேத, தண்டம் என்று சொல்லப்படுகின்ற கொடுத்தல், இன் சொல் சொல்லல், வேறு படுத்தல், மற்றும் ஒறுத்தல் இதுதான் வழிமுறை.
இதில் “வேறு படுத்தல்” (பேதம்) என்பது நமது படையின் சிறப்பினை, செருக்கினை பகைக்கு அறிவிப்பது.
நம் பேராசான் எப்படி ஆரம்பிக்கிறார் என்று பார்க்கலாம்.
“என்னைமுன் நில்லன்மின் தெவ்வீர் பலர் என்னை
முன்நின்று கல்நின் றவர்.” --- குறள் 771; அதிகாரம் – படைச் செருக்கு
என் + ஐ =என்னை; ஐ என்றால் ஐயன், தலைவன் என்பதைக் குறிக்கும்.
தெவ்வீர் = பகைவர்; தெவ்வீர் என் ஐ முன் நில்லன்மின் = பகைவர்களே என் தலைவன் முன் நின்று போர் செய்யாதீர்கள்; தெவ்வீர் பலர் என் ஐ
முன் நின்று கல் நின்றவர் = பகைவர்கள் பலர் எனது தலைவனுடன் போருக்கு நின்று இறுதியில் நடுக்கல்லாகி ஆங்காங்கே நின்று கொண்டுள்ளார்கள்.
பகைவர்களே என் தலைவன் முன் நின்று போர் செய்யாதீர்கள். பகைவர்கள் பலர் எனது தலைவனுடன் போருக்கு நின்று இறுதியில் நடுக்கல்லாகி ஆங்காங்கே நின்று கொண்டுள்ளார்கள்.
(என்ன வீட்டிலே சொல்லிட்டு வந்துட்டீங்களா? – என்று கேட்பது போல ஒரு மிரட்டல்!)
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios