22/11/2023 (991)
அன்பிற்கினியவர்களுக்கு:
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
நம்மை அழிக்க நினைக்கும் எந்தவொரு வலிமையானப் பகையில் இருந்தும்கூடத் தப்பித்துவிடலாம். ஆனால், நாம் செய்து வைத்து இருகிறோமோ அந்தத் தீய வினைகள், அதில் இருந்து தப்பவே முடியாது! அவை நம்மைத் தொடர்ந்து வந்து தாக்கவேச் செய்யும். ஆகவே, மானுடரே, தீவினைகளுக்கு அஞ்சுங்கள் என்கிறார் நம் பேராசான்.
நாம் ஒரு நல்லது செய்திருந்தால் நாம் மறைந்தபிறகு சிலர் அதன் புகழைச் சொல்லலாம். ஆனால், ஒரே ஒரு தீமையைச் செய்திருந்தாலும்கூட, நாம் மறைந்த பின்னும், நம்மைத் தூற்ற ஓர் ஆயிரம் பேர் இருப்பார்கள். காலத்திற்கும் அந்த அவச்சொல் இருந்தே தீரும்!
நம்மாளு: அதுவும் சரிதானே. விஷம் ஒரு துளிதானே என்று யாரும் அதை விழுங்கமாட்டார்கள். அதுபோலத் தீயவினை ஒன்றாக இருந்தாலும் அதன் விளைவு? தீயவைத் தீய பயத்தலால் தீயினும் அஞ்சப்படும் என்று நம் பேராசான் சொல்லியிருக்கிறாரே! காலத்திற்கும் கடியத்தான் செய்வார்கள்.
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென் றடும். - 207; தீவினை அச்சம்
வீயாது = நீங்காது; எனைப் பகை உற்றாரும் உய்வர் = எந்தப் பகையிலிருந்தும் தப்பித்துக் கொள்ள வழியிருக்கும்; வினைப்பகை வீயாது பின்சென்று அடும் = ஆனால், நாம் செய்த தீவினையாகியப் பகை ஓயாது. நம்மைத் தொடர்ந்து வந்து அழ வைக்கும். அழிக்கும்.
எந்தப் பகையிலிருந்தும் தப்பித்துக் கொள்ள வழியிருக்கும். ஆனால், நாம் செய்த தீவினையாகியப் பகை ஓயாது. நம்மைத் தொடர்ந்து வந்து அழ வைக்கும். அழிக்கும்.
வீ என்றால் மலர்களின் எழுவகைப் பருவங்களில் இறுதிப் பருவம். காண்க 13/11/2021 (263). அஃதாவது, அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், செம்மல், வீ.
வீ நன்கு மலர்ந்த பருவம்.
வீ ஓரெழுத்து ஒரு மொழி. வீ என்றால் கர்பந்தரித்தல், சாவு, கொல்லுதல், நிக்கம், போதல் என்று பல பொருள்களைக் கழகத் தமிழ் அகராதி சொல்கிறது.
வீயாது என்றால் கொல்லாது, அழிக்காது, நீங்காது, விலகாது, நம் நிலையினின்று நீக்காது என்ற பொருளில் இந்தக் குறளில் மட்டுமல்ல இந்தக் குறளைத் தொடர்ந்து வரும் குறளிலும் பயன்படுத்தியுள்ளார். அந்த வீயாது எது போன்றது என்றால் நம் நிழல் போன்றது என்ற உவமையை எடுத்து வைக்கிறார்.
நிழலானது, சில சமயம், நம்மைவிட்டு விலகுவது போல நீண்டு நெடிய உருவம் எடுக்கும். ஆனால், அது முடிவில் நம் காலுக்குள்ளேயே ஒளிந்து கொள்ளும். அது போலத் தீவினையானது நம்மைவிட்டு விலகியிருப்பது போலத் தோற்றமளிக்கும். ஆனால், குனிந்துப் பார்த்தால் நம் காலைச் சுற்றிக் கொண்டு நம்மை விடாது இருக்கும் என்கிறார்.
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைந் தற்று. - 208; தீவினை அச்சம்
தீயவை செய்தார் கெடுதல் = தீயவை செய்தவர்களை அத் தீவினைகள் அடுத்துக் கெடுக்கும். அது எது போன்றது என்றால்; நிழல் தன்னை வீயாது அடி உறைந்து அற்று = நம் நிழலானது எப்படி நம்மைவிட்டு விலகுவதில்லையோ அவ்வாறே நம் காலடியிலேயேச் சுற்றிக் கொண்டிருக்கும்.
தீயவை செய்தவர்களை அத் தீவினைகள் அடுத்துக் கெடுக்கும். அது எது போன்றது என்றால், நம் நிழலானது எப்படி நம்மைவிட்டு விலகுவதில்லையோ அவ்வாறே நம் காலடியிலேயேச் சுற்றிக் கொண்டிருக்கும்.
தீதும் நன்றும் தோழர்களே பிறர்தர வருவதில்லை!
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Commentaires