26/06/2023 (844)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
குறள் 748 இல், முற்றாற்றி முற்றியவரையும் பற்றறாற்றி வெல்வது அரண் என்றார். குறள் 742 முதல் 748 வரை அரணின் இலக்கணங்களைச் சொன்னார்.
என்னதான் பாதுகாப்பு இருப்பினும் செயல்திறன் மிக்கவர்கள் தேவை என்பதை அடுத்துவரும் இரு குறள்களால் எடுத்து வைக்கிறார்.
“வினைமுகத்து வீறு எய்தி மாண்டது அரண்” என்கிறார். அதாவது, நம்மைச் சூழ்ந்துகொண்டு அழிக்க நினைப்பவர்களை எதை எதைக் கொண்டு சிறப்பாகச் செய்யமுடியுமோ அதை அதைக் கொண்டு சிறப்பாகச் செய்து விரட்டி விட வேண்டுமாம்.
அது மட்டுமல்ல, இந்தச் செயல்கள், மாற்றார் நம்மை சாய்த்துவிடலாம் என்று எண்ணும்போதே, அதாவது தொடக்கத்திலேயே, அவர்களைச் சாய்த்துவிடும் வல்லமையோடு இருக்க வேண்டுமாம்.
“முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்டது அரண்.” --- குறள் 746; அதிகாரம் – அரண்
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறு எய்தி = தாக்குதலைத் தொடங்கிய தருணத்திலேயே பகைவர்கள் சாய நம் செயல்கள் சிறப்பாக இருந்து; மாண்டது அரண் = மேலும் சிறப்பாக விளங்குவது அரண்.
தாக்குதலைத் தொடங்கிய தருணத்திலேயே பகைவர்கள் சாய நம் செயல்கள் சிறப்பாக இருந்து மேலும் சிறப்பாக விளங்குவது அரண்.
முளையிலேயே கிள்ளி எறிய செயல் வீரர்கள் இருக்கணும்.
அதாவது, ஆயிரங்கள் இருந்தும், வசதிகள் இருந்தும், பாதுகாப்புகள் இருந்தும் செயல் வீரர்கள் இல்லயென்றால்?
இல்லையென்றால், ஒரு பயனும் இல்லை.
“எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.” --- குறள் 750; அதிகாரம் – அரண்
எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் = மேலே சொல்லப்பட்ட சிறப்புகளைக் கொண்டிருந்தும்; வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண் = செய்துமுடிக்கும் செயல் வீரர்கள் இல்லாவிட்டால் எந்த பாதுகாப்பினாலும் பயனில்லை.
வினைமாட்சியிலார் செய்யும் செயல்களாவன: ஆயிரம் இருந்தும் சும்மா தள்ளிப் போட்டுக்கொண்டிருப்பது, ஒன்றுக்கு பத்து என்று அளவிற்கு அதிகமாக செய்வது, செய்ய முடியாதவற்றை செய்கிறேன் என்று நேரத்தை வீண்டிப்பது என்பன.
மேலே கண்ட இரு பாட்டாலும், அந்த அந்த நேரத்தில் அந்த அந்த உத்திகளைப் பற்றி வெற்றி பெறும் வகையில், பாதுகாக்கும் செயல் வீரர்கள் இருக்க வேண்டும் என்று முடிவாகச் சொல்கிறார் நம் பேராசான்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments