23/05/2022 (451)
அடுத்துவரும் நான்கு பாடல்கள் (896,897,898, & 899) மூலம் அறிவால், ஞானத்தால், அருந்தவத்தால் உயர்ந்துநிற்கும் பெரியாரைப் பிழையாமையைச் சொல்கிறார்.
கடவுள் வாழ்த்து எனும் முதல் அதிகாரத்தில் ஆறாவது குறளாக ஒரு குறிப்பினை அப்போதே உணர்த்தி இருக்கிறார். மீள்பார்வைக்காக:
“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.”--- குறள் 6; அதிகாரம் – கடவுள் வாழ்த்து
புலன்களின் மூலம் பெறும் ஆசை அற்றவனது மெய்யான (விருப்பு, வெறுப்பற்ற) ஒழுக்க நெறியில் நின்றவர்கள் எக்காலத்தையும் கடந்து நீண்டு வாழ்வார்கள்.
மேலே சொன்னக் குறள் வழி நிற்கும் பெரியார்களைப் பிழையாமை, எந்நாளும், எப்போதும் நன்று என்கிறார். இது ஒரு முக்கியமான குறள். இதைத் தேடி வாசிக்கவும். காண்க 18/07/2021 (145).
அத்தகையப் பெரியார்களுக்குத் தவறிழைத்தல், அவமதித்தல் முதலான காரியங்களைத் தவிர்ப்பது மிகவும் நன்று.
அதற்கு ஒரு உவமையைச் சொல்கிறார். அதாவது, காட்டிடைச் சுடப்படும் உடல்கூட, அதிலிருந்து தப்பி, எழுந்து நடக்கலாமாம்!
அதற்கு வாய்ப்பு (probability) எவ்வளவு இருக்கும்? பூஜ்ஜியமாகத்தானே இருக்கும். இல்லையென்றால் அரிதினும் அரிதாக நிகழலாம்!
அவ்வாறு, அரிதினும் அரிதான செயல்கூட நடந்துவிடுமாம். ஆனால், பெரியாரைப் பிழைத்து வாழ்ந்துவிடலாம் என்பது நடக்கவே நடக்காதாம்.
நம் பேராசான் சொல்ல வருவது மிகவும் கவனிக்கத் தக்கது. ஒரு நொடிப் பொழுதுபோதும் பெரியார்கள் பார்வையாலேயோ, இல்லை, பாராமுகத்தாலேயே நமக்கு பாதிப்புகள் வரலாம்.
“எரியால்சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.” --- குறள் 896; அதிகாரம் – பெரியாரைப் பிழையாமை
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் = காட்டிடை வைத்து சுடப்படும் உடல்கூட உயிர் பெற்று எழுந்து வாழலாம்; பெரியாரைப் பிழைத்தொழுகுவார் உய்யார் = தவத்தால், ஞானத்தால், ஒழுக்க நெறிநின்று வாழும் பெரியார்களை அவமதித்து நடப்பவர்கள், நன்கு வாழ்தல் என்பதற்கு வாய்ப்பில்லை.
நம்மாளின் கருத்து: பெரியார்களிடம் எப்போதுமே, அகலாது அணுகாதுதான் தீக்காய்தல் வேண்டும். ஒப்பவில்லையா, நைசாக நகர்ந்துவிட வேண்டும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
Comments