23/06/2023 (841)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
தற்சார்பு உணவு உற்பத்தியைப் பற்றி குறள் 745 இல் சொல்லி மேலும் அங்கு வாழும் மக்கள் எளிதாக தங்களது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதும் அரணுக்கு இலக்கணம் என்றார். காண்க 22/06/2023 (840). மீள்பார்வைக்காக:
“கொளற்கரியதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீர தரண்.” --- குறள் 745; அதிகாரம் – அரண்
மேலேக் கண்டக் குறளைத் தொடர்ந்து, உணவுப் பொருள்கள் மட்டுமல்லாது மற்றைய எல்லாப் பொருள்களும் அந்த நாட்டினுள்ளே கிடைக்கும் வகையில் ஒரு நாடு இருக்க வேண்டுமாம். மேலும், நாட்டிற்கு ஒரு சிக்கல் ஏற்படின் அந்தச் சமயத்தில் கை கொடுக்கும் நல்ல மக்கள் இருப்பதும் ஒரு பெரும் பாதுகாப்பு என்கிறார்.
அதனால், அரண் என்பது கோட்டையின் மதில் என்று மட்டும் பொருள் கொள்ளத் தேவையில்லை.
குறளுக்குப் போவோம்.
“எல்லாப் பொருளும் உடைத்தா யிடத்துதவும்
நல்லாள் ளுடைய தரண்.” --- குறள் 746; அதிகாரம் – அரண்
எல்லாப் பொருளும் உடைத்தாய் = நாட்டில் உள்ள அனைவருக்கும் வேண்டிய அனைத்து அத்தியாவசியப் பொருட்களிலும் தன்னிறைவாய்; இடத்து உதவும் நல்லாள் உடையது அரண் = தக்க சமயத்தில் உதவும் நல்ல மக்களைக் கொண்டது பாதுகாப்பாகும்.
நாட்டில் உள்ள அனைவருக்கும் வேண்டிய அனைத்து அத்தியாவசியப் பொருட்களிலும் தன்னிறைவாய், மேலும், தக்க சமயத்தில் உதவும் நல்ல மக்களைக் கொண்டதும் பாதுகாப்பாகும்.
பாதுகாப்பு என்றால் அனைத்து அம்சங்களும் இருக்க வேண்டும். இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ ஒரு நாடோ அல்லது வீடோ தனிமைப் படுத்தப்படலாம். இந்தக் காலத்தில்தான் பேரிடர்கள் ஏராளாமக உள்ளனவே!
பேரிடர்களைத் தவிர்க்கவும் வேண்டும். அது நிகழ்ந்துவிட்டால் அதைச் சமாளிக்கவும் தெரிய வேண்டும். அந்தச் சமயம் பார்த்து மக்களைக் குழப்ப ஒரு கூட்டம் முயலவும் செய்யும். நாம் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டும் குறை சொல்லிக் கொண்டும் இருந்தால் அது மாற்றாருக்கு வழி விட்டது போல் ஆகும். இதையெல்லாம் சொல்கிறார் நம்ம பேராசான் அடுத்தக் குறளில்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments