10/02/2023 (708)
ஒற்று என்பது நாட்டில் நடக்கும் செய்திகளை அப்போதைக்கு அப்போதே தலைமைக்குத் தெரிவிப்பது.
வந்தச் செய்திகளுக்கு ஏற்றார் போல் அதனை ஆதரிப்பதோ, அடக்குவதோ தலைமையின் கடமை. அதுவும், அல்லும் பகலும் அதுவே தொழிலாகவும் இருக்க வேண்டும்.
இதை நம் பேராசான், ‘எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்’ என்கிறார்.
எல்லார்க்கும் என்றால் பகை, நொதுமல், நட்பு ஆகிய மூன்று பிரிவினர்க்குள்ளும்; எல்லாம் நிகழ்பவை என்றால் உள்ளும் புறமும் நடக்கும் அனைத்து சொற்களும், செயல்களும்.
எஞ்ஞான்றும் என்றால் எப்போதும்.
‘வல்லறிதல் வேந்தன் தொழில்’ என்று முடிக்கிறார். வல்லறிதல் என்றால் விரைந்து அறிதல் என்று ஒரு பொருள். மற்றொரு பொருள், அந்தச் செய்திகளுக்கு ஏற்றார் போல் ஆதரிப்பதா, அடக்குவதா என்ற அறிவையும் பெற்று இருத்தல். அதுவே, ஒரு தலைமைக்குத் தொழிலாக இருக்க வேண்டும்.
“எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.” --- குறள் 582; அதிகாரம் – ஒற்றாடல்
இந்தக் குறளில் ‘ஒற்று’ என்ற சொல்லே இல்லையே! நீ எப்படி ஒற்று என்று சொல்கிறாய்? என்று கேட்கலாம். ‘ஒற்று’ என்பது இந்த அதிகாரத்தின் தலைப்பைக் கொண்டு வருவிக்கப்படுகிறது.
ஒற்றர்கள் பலவிதமாம். அதுவும் குறிப்பாக, ஒன்பது விதம் என்று விரிக்கிறார்கள். வியப்பாகவும், விந்தையாகவும் இருக்கிறது. தற்காலத்தில்தான் எத்துனை ஒற்றர்கள்?
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments