06/10/2023 (944)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
“பதவி வரும்போது பணிவும் வரவேண்டும்
துணிவும் வர வேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வர வேண்டும் தோழா
அன்பே உன் அன்னை அறிவே உன் தந்தை
உலகே உன் கோயில் ஒன்றே உன் தெய்வம்
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
...
கடமை அது கடமை...” கவிஞர் வாலி, இன்னிசை இரட்டையர்கள் விஸ்வநாதன் இராமமூர்த்தி, திரைப்படம் – தெய்வத்தாய்(1964)
பணிவு எல்லார்க்கும் நன்மையைப் பயக்கும். அது ஒரு அணி என்றார். அஃதாவது சிறப்பு என்றார். அவருள்ளும் செல்வமும் பதவியும் உயர்வும் வந்த பொழுதும் பணிவினை விட்டுவிடாமல் இருப்பது மேலும் சிறப்பு என்கிறார்.
“எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.” --- குறள் 125; அதிகாரம் – அடக்கமுடைமை
எல்லார்க்கும் பணிதல் நன்றாம் = எல்லார்க்கும் பணிவுடைமை சிறப்பு; அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து = அவ்வெல்லாருள்ளும் பதவி, செல்வம், பொருள் என்று சிறந்து நின்ற போதும் பணிவுடன் இருப்பதே மேலும் சிறப்பு சேர்க்கும்.
பதவி வரும்போது பணிவு வரவேண்டும் – இதுதான் குறிப்பு.
அடக்கமுடைமை என்பது பணிவுடைமை. பணிவு என்பது மனம் மொழி மெய்களால் அடங்குவது. அது எவ்வாறெனின், ஐந்து புலன்களையும் அடக்குவது. அது எவ்வாறெனின், ஆமைபோல் ஐந்தடக்கல் என்றார்.
அதாங்க, ஆமைப் போல அடக்கணும். இந்தக் குறளை நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். காண்க 11/11/2021 (261). மீள்பார்வைக்காக:
“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து.” … குறள் 126; அதிகாரம் – அடக்கமுடைமை
ஒருமை என்றால் என்ன? ஒருங்குவது. ஒருங்கு என்றால் ஒன்றாய் இருத்தல்.
ஒன்றாய் இருத்தல் என்றால்?
புலன்கள் ஐந்தும் ஒருமித்து ஒரே குறிக்கோளோடு இயங்குதல். இதை “ஒருங்கியம்” எனலாம். ஒருங்கு+இயம்.
எந்த ஒன்றும் சரிவர இயங்க ஒருமித்தச் செயல்பாடு தேவை. அதைத்தான் அமைப்பு அல்லது (System) என்கிறோம். அது அவ்வாறு ஒருமித்து செயல்படவில்லையென்றால் அமைப்பு முறை (System) சரியில்லை என்கிறோம்.
அடக்கத்திற்கு, அடங்குவதற்குக் குறியீடாக ஆமையாரைப் பைந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடுகிறார்கள்.
ஏன் ஆமையார்?
நாளைத் தொடர்வோம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் மதிவாணன்.
அடக்கத்திற்கு, அடங்குவதற்குக் குறியீடாக ஆமையாரைப் பைந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடுகிறார்கள். Interestingly in Bhagavat Gita alao Tortoise is taken as an example for controlling five sense organs.. Tortoise pulls out five arms/ legs into its shell when threatened...withdrawing 5 sense organs from sense objects.. It is said that Gita itself has drawn this from some Upanishad.