30/12/2023 (1029)
அன்பிற்கினியவர்களுக்கு:
கூடா ஒழுக்கம் என்பது மறைவாக அல்லன செய்தல். அல்லனவென்றால்?
வயதான காலத்திலும் உடல் தேவைகள் அடங்காமல் மனம் அலை பாய்வது. அஃதாவது, இன்ப நுகர்ச்சி, பேராசை, காமம்.
தவ சீலர் போன்று வேடமிட்டுத் தரமற்றச் செயல்களைச் செய்வது. அவ்வாறு வேடமிட்டு ஏமாற்றுபவர்கள் மிகக் கொடியவர்கள் என்றார்.
பற்றுகளை அறுக்க வேண்டிய தருணத்தில் பகல் வேடம் போடுபவர்கள் அவர்கள். அவர்களிடம் சற்றுக் கவனமாக இருக்க வேண்டும் என்ற குறிப்பினையும் தந்தார். முற்றும் துறந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களிடம் கோடிக் கணக்கில் சொத்துகள்! எப்படி வந்தன? ஏன் அவர்களுக்குத் தேவை?
கூடா ஓழுக்கத்தைத் தொடரவும், மேலும் செய்யும் தப்புகளை மறைக்கவும் பணம் வேண்டுமே, அதற்காகக் களவெடுத்தல். பிறரை ஏமாற்றி, வஞ்சித்து பொருள்களைக் கவர்வது என்பது ஓர் இயல்பான வீழ்ச்சி. இதில் இருந்து விலகி நிற்க வேண்டும் என்பதற்காகக் கள்ளாமை என்னும் அதிகாரத்தை கூடா ஓழுக்கத்தைத் தொடர்ந்து வைக்கிறார்.
கூடா ஒழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை உள்ளிட்டவை இல்லறத்தானுக்கும் வேண்டியன. துறவறத்தானுக்கு இன்றியமையாதன.
சரி, நாம் குறளுக்குள் நுழைவோம்.
எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு. – 281; - கள்ளாமை
எள்ளாமை வேண்டுவான் என்பான் = நாம் இந்த உலகைவிட்டுப் பிரிந்தபின் நம்மைப் புகழ விட்டாலும் பரவாயில்லை, இகழாமல் எள்ளாமல் இருத்தல் வேண்டும் என்று நினைப்பவன்; எனைத்தொன்றும் கள்ளாமை தன் நெஞ்சு காக்க = பிறர்க்குரிய யாதொரு பொருளையும் கள்ளத்தால் கவரலாம் என்ற எண்ணம் தன் நெஞ்சத்தில் எழாமல் காத்தல் வேண்டும்.
நாம் இந்த உலகைவிட்டுப் பிரிந்தபின் நம்மைப் புகழ விட்டாலும் பரவாயில்லை, இகழாமல் எள்ளாமல் இருத்தல் வேண்டும் என்று நினைப்பவன், பிறர்க்குரிய யாதொரு பொருளையும் கள்ளத்தால் கவரலாம் என்ற எண்ணம் தன் நெஞ்சத்தில் எழாமல் காத்தல் வேண்டும்.
நிலமிசை நீடு வாழ்தல் என்பது அனைத்து உயிர்களின் அடிப்படை ஆசை. அந்த ஆசை அவசியமானதும்கூட! நம் செயல்கள் இந்த உலகத்தை ஒரு மேலான உலகமாகவிட்டுச் செல்வதாக அமைய வேண்டும்.
அதற்கு மிக முக்கியம் புலனடக்கம். முதல் அதிகாரத்திலேயே அந்தக் குறிப்பைக் கொடுத்துவிட்டார். காண்க 18/07/2021. மீள்பார்வைக்காக:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். - 6; - கடவுள் வாழ்த்து
மனவொழுக்கம் பேண, வாக்கில் சுத்தம் இருக்கும். வாக்குச் சுத்தமாகச் செயல்கள் தூய்மையாகும். செயல்கள் தூய்மையானால் அனைத்து உயிரும் கை கூப்பித் தொழும். அவ்வளவே.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments