top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

எழுபிறப்பும் தீயவை தீண்டா ... குறள் 62

14/11/2021 (264)

எழு, எழுமை,ஏழு போன்ற சொற்களை நம் பேராசான் எப்படியெல்லாம் பயன் படுத்தி இருக்கிறார் என்பதை பார்த்து வருகிறோம்.


எழு பிறப்பு என்று இரண்டு குறள்களில் சொல்லியிருக்கார். செய்நன்றியறிதல் (11) மற்றும் புதல்வரைப் பெறுதல் (7) – இந்த இரு அதிகாரங்களில், நம் பேராசான், சொல்லியிருக்கிறார்.


ஒரு குறளை ஏற்கனவே பார்த்து விட்டோம். மீள்பார்வைக்காக:


எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமம் துடைத்தவர் நட்பு.” --- குறள் 107; அதிகாரம் – செய்நன்றியறிதல்


எழுமை = சிறப்பு, உயர்ச்சி; எழுபிறப்பும்= ஏழு பிறப்பு, ஏழு தலைமுறைக்கும்; உள்ளுவர் = (நன்றி உணர்ச்சி மிக்கவர்கள்) நினைத்துப் பார்ப்பார்கள்; தங்கண் = தங்களின்; விழுமம் = துன்பம்; துடைத்தவர் நட்பு = நீக்கியவர்களின் நட்பினை, அன்பினை, அருளினை.


மற்றொன்றை இன்றைக்குப் பார்க்கலாம்.


எழு பிறப்பு என்றால் எழும் தலைமுறைகள், எழும் பிறப்புகள் என்று பொருள் எடுக்கலாம். ஏழு பிறப்புகள் என்றும் பல அறிஞர் பெருமக்கள் சொல்கிறார்கள்.


எழும் பிறப்புகளில் எல்லாம் தீமைகள் தீண்டாதாம். எப்போது?


பண்பான மக்களை ஒருவன் பெற்று விட்டால்.


அதுவும் எப்படி இருக்கனுமாம்?


இழி செயல்களைச் செய்து வரும் பழி அவர்களிடம் நெருங்காமல் இருந்தால்!


அந்த மாதிரி பிள்ளைப் பேறு இருந்தால் எழும் பிறப்புகளிலெல்லாம் ஒரு தீமையும் தீண்டாதாம்.


எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.” --- குறள் 62; அதிகாரம் – புதல்வரைப் பெறுதல்


எழுபிறப்பும் தீயவை தீண்டா = எழும் பிறப்புகளில் தீயவைகள் தீண்டாது; பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் = பழிச் சொல்லுக்கு ஆளாகமல் இருக்கும் மக்களைப் பெற்று விட்டால்


அப்போ, மக்கட் பேறு இருந்தால் மட்டும் போதாது. அது நன்மக்கட் பேறாக மாற்ற வேண்டியது ரொம்ப முக்கியம். – நான் சொல்லலைங்க நம் வள்ளுவப் பெருந்தகை சொல்கிறார். கொஞ்சம் கேட்டு வைப்போம்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




10 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page