10/11/2021 (260)
சிலரைப் பார்த்த உடனே பிடிக்கும். அப்போதுதான் பார்த்திருப்போம். ரொம்ப நாள் பழகினாற் போலத் தோன்றும். நமக்குத் தெரியாமலே ஒரு அதீத பாச உணர்ச்சி ஏற்படும். இதற்கெல்லாம் காரணமே இருக்காது. எல்லாருக்கும் இதுபோன்று நடந்திருக்க வாய்ப்பிருக்கு. இது நிற்க.
நன்றி உணர்ச்சி ரொம்பவே முக்கியம். Attitude of Gratitude என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறார்கள். நம் வள்ளுவப் பெருந்தகை ‘செய்நன்றியறிதல்’ (11) என்ற ஒரு அதிகாரத்தை வைத்திருக்கிறார்.
தக்க சமயத்தில் கைத்தூக்கி விட்டவர்களை, உதவியவர்களை, எந்த எதிர்பார்ப்பும் இல்லாது செய்த அந்த நட்பினை நாம மறந்துவிடக்கூடாதுன்னு நம் பேராசான் வலியுறுத்துகிறார்.
இது தனி மனிதனுக்கு மட்டுமா? இல்லை, சமுதாயத்திற்கும் பொருந்துமா?
இது எல்லாவற்றுக்கும் நிச்சயமாகப் பொருந்தும்.
நேற்றைய நிகழ்வுகள்தான் நாம இன்றைக்கு நன்றாக இருப்பதற்கு காரணம். பல பெரும் தலைவர்கள், முன்னோர்கள் தங்களை அழித்துதான் நம்மை இந்த நிலைமைக்கு கொண்டுவந்து வைத்துள்ளார்கள். அவர்கள் செய்த அந்த தன்னிகரிலாச் செயல்களை மறக்க முடியுமா?
தனி மனிதனாக இருந்தாலும், சமுதாயமாக இருந்தாலும் அந்த உதவிகளை நினைத்துப் பார்க்கனுமாம்.
அதுவும் எப்படியாம்?
அதன் சிறப்பை, உயர்வை ஏழு தலைமுறைக்கும் நினைத்துப் பார்க்கனும்.
‘ஏழு’ என்று போட்டிருக்கார். ‘ஏழு’ என்றால் எப்பவுமேன்னும் பொருள் எடுக்கலாம்.
“எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.” --- குறள் 107; அதிகாரம் – செய்நன்றியறிதல்
எழுமை = சிறப்பு, உயர்ச்சி; எழுபிறப்பும்= ஏழு பிறப்பு, ஏழு தலைமுறைக்கும்; உள்ளுவர் = (நன்றி உணர்ச்சி மிக்கவர்கள்) நினைத்துப் பார்ப்பார்கள்; தங்கண் = தங்களின்; விழுமம் = துன்பம்; துடைத்தவர் நட்பு = நீக்கியவர்களின் நட்பினை, அன்பினை, அருளினை.
இப்போ ஒரு தடவை முதல் பத்தியைப் படிங்க. இந்தக் குறளுக்கும் அதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கான்னு பாருங்க. இருந்தால் கொஞ்சம் சொல்லுங்க!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments