02/05/2024 (1153)
அன்பிற்கினியவர்களுக்கு:
காலம் கடந்தும் நிற்கும் கருத்துகள் கவனிக்கத் தக்கவை. இந்த உலகம் அறம் என்னும் அச்சாணியில் சுழன்று கொண்டுள்ளது.
ஓப்பீட்டு அளவில், இந்த உலகின் வாழ்நாளைக் கணக்கிடும்போது நம் வாழ்நாள் என்பது மிக, மிக, மிகச் சிறிய துளி ஆகும்.
இயற்கையானது தம்மைத் தாமே தகவமைத்துக் கொண்டு நீடித்து நிலைக்கும். அந்த அறிவை நாம் கைக்கொண்டால் நம் கருத்துகளும் இந்த உலகில் காலம் கடந்தும் நிலைக்கும். இதுவே சிறந்த அறிவாகும்.
எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு. – 426; - அறிவுடைமை
எவ்வது = எவ்வாறு; அவ்வது = அவ்வாறு; உறைவது = இடைவிடாமல் ஒழுகுவது, உறுதியாக நிற்பது;
உலகம் எவ்வது உறைவது = இந்த உலகம் எவ்வாறு தம்மைத் தாமே தகவமைத்துக் கொண்டு ஒரு ஒழுங்கில் ஒழுகிக் கொண்டு நிலைத்து இருக்கிறதோ; உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு = அதனைப் போன்று நாமும் உலகத்தோடு இயைந்து, இயற்கையில் இருந்து பாடங்களைக் கற்று ஒழுகினால், நம் கருத்துகளும் காலம் கடந்தும் நிலைக்கும். அஃதே அறிவு.
இந்த உலகம் எவ்வாறு தம்மைத் தாமே தகவமைத்துக் கொண்டு ஒரு ஒழுங்கில் ஒழுகிக் கொண்டு நிலைத்து இருக்கிறதோ, அதனைப் போன்று நாமும் உலகத்தோடு இயைந்து, இயற்கையில் இருந்து பாடங்களைக் கற்று ஒழுகினால், நம் கருத்துகளும் காலம் கடந்தும் நிலைக்கும். அஃதே அறிவு.
மேற்கண்ட கருத்தின் எதிர்மறையாக,
உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார். - 140; - ஒழுக்கமுடைமை
உலகத்தோடு பொருந்தி வாழக் கற்காதவர்கள், பல கலைகளைக் கற்று இருந்தாலும் புத்தி கொஞ்சம் மட்டுதான் என்றார். காண்க 28/01/2022.
இந்தக் குறள்களை மேலோட்டமாகப் பார்த்தால் “ஆடை அணியா ஊரில் ஆடை அணிந்தவன் முட்டாள்” என்பது போலத் தோன்றும். இஃது “ஒட்பம்” என்று எடுத்துக் கொள்ளலாம்.
நுண்பொருளைக் காண்பதுதான் அறிவு என்று கொள்ளப்படும் என்கிறார்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments