10/08/2023 (888)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
பொதுவாக ஏதிலார் என்றால் எதுவும் அற்றவர்கள் என்று பொருள். அதாவது எந்தத் துணையும் அற்றவர்கள் என்று பொருள்படும்.
எல்லா இடங்களிலும் அவ்வாறு பொருள் கொள்ள இயலாது.
ஏதிலார் என்றால் எதுவும் இல்லாதவர் என்று விரிக்கலாம். எதுவும் என்பதற்கு இடம் சுட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.
ஏதிலார் என்ற சொல்லை நம் பேராசான் ஆறு இடங்களில் பயன்படுத்துகிறார்.
நாம் ஏற்கெனவெ அந்தக் குறள்களில் சிலவற்றைப் பார்த்துள்ளோம். எடுத்துக்காட்டாக:
“ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.” குறள் 190;அதிகாரம் – புறங்கூறாமை
இங்கே “தம் குற்றம்” என்று வருவதால் “ஏதிலார் குற்றம்” என்பதற்கு “தொடர்பில்லாதவர் அல்லது அயலாரின் குற்றம்” என்று பொருள்படும்.
“ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.” --- குறள் 1099; அதிகாரம் – குறிப்பறிதல் (111)
இங்கே காதலார் என்று சொன்னதால் ஏதிலார் என்பதற்கு காதல் எதுவும் இல்லாதவர் என்று பொருள்படும்.
பேதைமை அதிகாரத்தில் ஓர் ஏதிலார் வருகிறார்! வருவதுமட்டுமல்ல அவர் பேதையிடம் ஏதாவது இருக்குமானால் அதனைச் சுருட்டுகிறார். அதற்கு அந்தப் பேதையும் மகிழ்ச்சியாக உடன்படுகிறார்.
பேதையின் வீட்டில் இருப்பவர்கள் பசித்திருக்க யாரோ பலர் பேதையுடன் சேர்ந்து கும்மாளம் போடுகிறார்கள். இவை நடக்கத் தானே செய்கின்றன.
வீட்டிற்கு ஒன்றும் செய்யமாட்டான். ஊரைக்கூட்டிக் கொண்டு ஊதித் தள்ளுவான். அதாங்க, அவனிடம் இருக்கும் செல்வத்தை ஊதித் தள்ளுவான்!
ஏதாவது ஒரு வழியில் பேதைக்குப் பணம் வரலாம். அவன் தான் ஏதம் கொண்டு ஊதியம் போகவிடுபவனாயிற்றே (குறள் 831, காண்க 13/11/2021 (263)) சும்மா இருப்பானா? அதை அழித்துவிட்டுதான் மறுவேலை!
அவனுக்கு ஒரு வேளை செல்வம் வருமாயின் அப்போதும் அதனால் அவனைச் சார்ந்தவர்களுக்கு எந்தப் பயனும் இருக்காது.
சரி, நாம் குறளுக்கு வருவோம்.
“ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.” --- குறல் 837; அதிகாரம் – பேதைமை
பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை = பேதைக்கு ஒரு வேளை பெரும் செல்வமே கிடைத்தாலும்; ஏதிலார் ஆர = அவனுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாதவர்கள், அஃதாவ்து யாரோ, அந்தச் செல்வத்தால் எல்லாம் பெற; தமர் பசிப்பர் = அவனுக்கு உரியவர்கள் வீட்டில் பசியுடன் வாடிக் கொண்டிருப்பர்.
பேதைக்கு ஒரு வேளை பெரும் செல்வமே கிடைத்தாலும் அதனால் எந்த வகையிலும் தொடர்பில்லாதவர்கள் யாரோ எல்லாம் பெற்று அனுபவிப்பார்களே தவிர அவனுக்கு உரியவர்கள் வீட்டில் பசியுடன் வாடிக் கொண்டுதாம் இருப்பர்.
அதாவது இப்படிப் பார்க்க வேண்டும். பிறக்கும் போதே யாரும் பேதையாகப் பிறப்பதில்லை. ஒருவன் தான் ஈட்டும் செல்வத்தை ஊதாரித்தனமாக ஊருக்கு வாரி இறைத்தால் அவன் பேதையில்லாமல் வேறு யார்? என்று கேட்கிறார்.
சரி, பெருஞ்செல்வத்தைத்தான் இப்படிச் செய்வானா என்றால் கொஞ்சமாக வந்தாலும் அதுவும் அதோகதிதானாம் சொல்கிறார் அடுத்தக் குறளில்.
நாளைச் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios