15/09/2021 (204)
இரண்டு பேரும் உறுதி பண்ணிட்டாங்க. ஆனால், இன்னும் வெளி உலகத்துக்கு அறிவிக்கலை. ஆகையால், அவர்கள் அறிவிக்கும் வரைக்கும் அவங்க நடிக்கும் நடிப்பு இருக்கே அதுவே தனிதானாம். சொல்வது யாரு, நம் பேராசான் தான். பார்ப்போம் அந்தக் குறளை:
“ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.” --- குறள் 1099; அதிகாரம் – குறிப்பறிதல் (111)
ஏதிலார் போல = முன்னே பின்னே தெரியாதவங்க போல; பொது நோக்கு நோக்குதல் = எல்லாரையும் பார்ப்பது போல் பொதுவாக பார்த்தல்; காதலார் கண்ணே உள = காதல் கொண்டவர்கள் இடம் உள.
அவர்களுக்கு உள்ளே இராசாயனம், அதாங்க கெமிஸ்ட்ரி (chemistry) நல்லா செயல்பட ஆரம்பித்து விட்டது. இது இருக்கட்டும். எனக்கு இப்போ ஒரு சந்தேகம்.
அது என்ன இராசயனம்? ஏன் பௌதீகம், உயிரியல் அதெல்லாம் இல்லை?
இராசயனத்தை கொஞ்சம் பார்க்கலாம்.
ரசம் + அயனம் = ரசாயனம்.
நம்மாளு: அதெப்படி, ரசயனம்ன்னு தானே வரனும். ரசாயனம்ன்னு ஏன் வருது? (சொல்லின் முதலில் ‘ர’ வரக்கூடாதாம், அதானாலே, இராசயனம்ன்னு எழுதுகிறார்கள் – நீங்க படிக்கும் போது ‘இ’ போட்டு படிங்க)
ஆனால், ரசாயனம் தான் சரியாம்.
உதாரணம்: உத்தரம் + அயனம் = உத்தராயனம். உத்தரம் என்றால் வடக்கு. அயனம் என்றால் பயனம். சூரியன் வடக்கே செல்லும் பயனமாம். ‘அ’ இங்கே ‘ஆ’ ஆகிவிட்டது.
நம்மாளு: ஐ, சூரியனை சுற்றி பூமிப்பந்துதானே சுற்றுது. அதெப்படி சூரியன் செல்லும் பயனமாகும்?
ரயிலிலோ, வேறு உந்துகளிலோ (வண்டிகளிலோ) பயனிப்பது நாம் தான், ஆனால், நம் பார்வைக்கு மரம், செடி, கொடியெல்லாம் பின்னோக்கி பயனிப்பது போலத்தெரிகிறதல்லவா அது போலவாம்! தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி – ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயனக் காலமாகும். தை மாதத்தில் சூரியன் தென்கிழக்கில் உதிப்பது போல் தோன்றும். ஆடி மாதத்தில் வட கிழக்கில் உதிப்பது போல் தோன்றும். அதான் தெற்கிலிருந்து வடக்குன்னு சொல்கிறோம். அடடா, எங்கேயோ போயிட்டோம். ரசாயனத்துக்கு வருவோம்.
ரசம் என்றால் சுவையாம். சுவையை நோக்கிய பயனம்தான் ரசாயனம். பார்த்தீங்களா,பௌதீகம் அது இது எல்லாம் சரிப்பட்டு வராது.
சுவையா இருக்கு இல்லையா. தமிழிலே எல்லா சொல்லும் பொருள் குறித்தனவாம் சொல்வது நம் தொல்காப்பியர். (ரசத்தைப் பற்றி நிறைய ரகசியத் தகவல்கள் இருக்கு. பிறகு பார்க்கலாம்.)
குறளை மறந்துடாதீங்க. இன்னொரு முறை மேலே போய் படிச்சுடுங்க.
நன்றிகளுடன், உங்கள் மதிவாணன்.
Comments