21/05/2024 (1172)
அன்பிற்கினியவர்களுக்கு:
யார்க்கும் பயன்படாத செல்வம் எத்தகையது என்பதனை ஒரு பெரும் புலவரின் கற்பனையில் காண்போம்.
தமிழர்களின் நாகரிகம் வளர்ந்த விதத்தை அவர்கள் நிலப் பரப்பினை நான்காகப் பிரித்த வகையினில் இருந்து அறிந்து கொள்ளலாம். காண்க 24/07/2021.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்றார்கள். நிலையில் திரிந்ததனைப் பாலை என்றார்கள்.
வெற்பு என்றால் குன்று, மலை. குறிஞ்சித் தலைவனை வெற்பன் என வழங்கினார்கள். முல்லைத் தலைவனை குறும்பொறை நாடன் என்றும், மருத நிலத் தலைவனை ஊரன் என்றும், நெய்தல் தலைவனைத் துறைவன் என்றும் வழங்கினார்கள்.
மூங்கில் என்பது புல் வகையினைச் சேர்ந்தது. இது பெரும்பாலும் மலைச் சரிவுகளிலும், வறண்ட பகுதிகளிலும் ஓங்கி வளரக் கூடியன. 120 அடிக்கும் மேலே முற்றிய மூங்கில்கள் வளரும். இதற்கு நீரின் தேவை மிகக் குறைவு. இதனைக் கவனத்தில் வையுங்கள்.
மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி. ஆங்கே, ஆர்பரிக்கும் அருவி கொட்டிக் கொண்டு இருக்கின்றது. அதனருகில் மூங்கில் தழைக்க முயன்று கொண்டு இருக்கிறது. அது வளர்ந்து 120 அடிக்கு முற்றினால் அதனிலிருந்து விலை மதிப்பில்லா முத்து உதிரும் என்றும் அந்த முத்தினை எடுத்துக் கொண்டு நீ மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றால் அது நிகழ்கின்ற காரியமா? அது நடவாது.
நாயிடம் அகப்பட்டுக் கொண்ட முழுத் தேங்காயை தானும் உண்ண முடியாமல், பிறரும் அதனை நெருங்கமுடியாமல் “நாய் பெற்ற தெங்கம் பழம்” என்பார்களே அதனைப் போலப் பாழாகிக் கொண்டிருக்கும்.
அஃது எது?
பிறர்க்கு வழங்கலும், தாம் துய்தலும் இல்லாதவன் பெற்ற பெரும் செல்வம்தான் அது!
இந்தக் காட்சிகளைப் பாடலாக்குகிறார் முன்றுறையரையனார் பழமொழி நானூறில். ஐயனின் கொடைதாம் “நாய் பெற்ற தெங்கம் பழம்” என்னும் மரபுத் தொடர்(Idiom). அஃதாவது, பழமொழி. அந்தப் பாடலைப் பார்ப்போம்.
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம்,-தழங்கு அருவி
வேய் முற்றி முத்து உதிரும் வெற்ப!-அது அன்றோ,
நாய் பெற்ற தெங்கம்பழம். – பாடல் 216; - பழமொழி நானூறு
வேய் = மூங்கில்; தழங்கல் = பலத்த ஓசை; வெற்ப = வெற்பன் = குறிஞ்சி நிலத் தலைவன்;
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் = பிறர்க்கு வழங்கலும், தாம் துய்தலும் இல்லாதவன்; பெற்ற முழங்கு முரசுடைச் செல்வம் = பெற்ற அந்தப் பெருஞ்செல்வம் “நான் பெருஞ்செல்வந்தன்தான்” என்று பறைசாற்றிக் கொண்டாலும் அதனால் என்ன பயன்!; தழங்கு அருவி வேய் முற்றி முத்து உதிரும் வெற்ப= ஆர்பரிக்கும் அருவியின் அடியில் மூங்கில் வளர்ந்து, அந்த மூங்கினில் இருந்து விலை மதிப்பில்லா முத்து உதிரும் என்பார்கள் குறிஞ்சி நிலத் தலைவனே; அது அன்றோ,
நாய் பெற்ற தெங்கம்பழம் = அஃது அன்றோ நாயிடம் அகப்பட்டுக் கொண்ட முழுத் தேங்காய்.
பிறர்க்கு வழங்கலும், தாம் துய்தலும் இல்லாதவன் பெற்ற அந்தப் பெருஞ்செல்வம் “நான் பெருஞ்செல்வந்தன்தான்” என்று பறைசாற்றிக் கொண்டாலும் அதனால் என்ன பயன்! ஆர்பரிக்கும் அருவியின் அடியில் மூங்கில் வளர்ந்து, அந்த மூங்கினில் இருந்து விலை மதிப்பில்லா முத்து உதிரும் என்பார்கள் குறிஞ்சி நிலத் தலைவனே! அஃது அன்றோ நாயிடம் அகப்பட்டுக் கொண்ட முழுத் தேங்காய்.
நான்கு அடிகளில் எவற்றையெல்லாம் இணைக்கிறார் பாருங்கள்!
வள்ளுவப் பெருமான் நீயும் நன்றாக இரு; மற்றவரையும் நன்றாக வாழ வை என்பார் பல குறள்களில். உன்னை அழித்துக் கொண்டு பிறரை வாழ வை என்று சொல்பவர் அல்லர். எதிலும் ஒரு அளவு வேண்டும் என்பவர்தாம் அவர்.
நமக்குத் தேவைகள் என்பன:
உடலுக்கு உணவு;
உள்ளத்திற்கு நல்ல எண்ணங்கள்;
உயிர்க்கு ஈதல் இசைபட வாழ்தல்.
அருந்தியது அற்றது போற்றி உணின் மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு என்றார் குறள் 942 இல். காண்க 17/04/2021;
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் என்றார் குறள் 34 இல். காண்க 15/02/2021;
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு என்றார் குறள் 231 இல். காண்க 28/06/2021.
இந்த நன்றியில் செல்வத்தில் சொல்வதெல்லாம் உயிர்க்குதான் சொல்கிறார்.
தாமும் அனுபவிக்காமல் பிறர்க்கும் உதவியாக இல்லாமல் இருப்பவனிடம் இருக்கும் செல்வம் அவன் உயிர்க்கு ஒரு நோய் என்கிறார்.
உடலுக்கு நோய் உணவினால் வரும்; உள்ளத்திற்கு நோய் தீய எண்ணங்களால்; உயிர்க்கு நோய் பூதம் புதையலைக் காப்பது போலக் காக்கும் செல்வத்தினால்!
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
றீத லியல்பிலா தான். – 1006; - நன்றியில் செல்வம்.
தான்துவ்வான் தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பிலாதான் = தமக்கும் பயன்படுத்திக் கொள்ளாமலும், வேண்டியவர்க்கும் கொடுத்து உதவாமலும் இருக்கும் இயல்பினைக் கொண்டவர்களின்; பெருஞ்செல்வம் ஏதம் = பெருஞ்செல்வமானது, அவர்களை அழிக்கும் ஓர் நோய் ஆக மாறும்.
தமக்கும் பயன்படுத்திக் கொள்ளாமலும், வேண்டியவர்க்கும் கொடுத்து உதவாமலும் இருக்கும் இயல்பினைக் கொண்டவர்களின் பெருஞ்செல்வமானது, அவர்களை அழிக்கும் ஓர் நோய் ஆக மாறும்.
ஏதம் என்றால் அழிவு; ஏமம் என்றால் பாதுகாப்பு.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments