top of page
Search

ஐயுணர் வெய்தியக் கண்ணும் ... 354, 362, 356

04/02/2024 (1065)

அன்பிற்கினியவர்களுக்கு:

தற்காலத்தில் “பயம்” என்றால் “அச்சம்” என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். ஆனால், நம் பேராசான் “பயம்” என்பதை “பயன்” என்ற பொருளில் பயன்படுத்துகிறார்.

 

நம் பேராசான் என்ன சொல்கிறார் என்றால் அறிவைச் சேகரிக்கும் ஐந்து புலன்களும் (வாய், கண், மெய், காது, மூக்கு) சரியாக வேலை செய்து நமக்குத் தெரிவித்தாலும்கூட பயன் இல்லையாம்!

 

ஏனெனில், ஆராய்ந்து இருள் நீக்கி இன்பம் பயக்கும் மெய்யுணர்வு இல்லாவிடின் ஐந்து புலன்களால் பயன் இல்லை என்கிறார். 

 

ஐயுணர் வெய்தியக் கண்ணும்  பயமின்றே

மெய்யுணர் வில்லா தவர்க்கு. – 354; - மெய்யுணர்தல்

 

மெய்யுணர்வு இல்லாதவர்க்கு = ஆராய்ந்து இருள் நீக்கி இன்பம் பயக்கும் மெய்யுணர்வு இல்லாவிடின்; ஐ உணர்வு எய்தியக் கண்ணும்  பயமின்றே = அறிவைச் சேகரிக்கும் ஐந்து புலன்களும் (வாய், கண், மெய், காது, மூக்கு) சரியாக வேலை செய்து நமக்குத் தெரிவித்தாலும்கூட பயன் இல்லை.

 

ஆராய்ந்து, இருள் நீக்கி இன்பம் பயக்கும் மெய்யுணர்வு இல்லாவிடின், அறிவைச் சேகரிக்கும் ஐந்து புலன்களும் (வாய், கண், மெய், காது, மூக்கு) சரியாக வேலை செய்து நமக்குத் தெரிவித்தாலும்கூட பயன் இல்லை.

 

மேலும், எந்தப் பொருளாக இருந்தாலும், அது எத்தகையப் பண்புகளைப் பெற்றிருந்தாலும், அப்பொருளின் ஆகக் கடைசியான உள்பொருளை உணர்வது அறிவு என்றார் குறள் 355 இல். காண்க 21/01/2024.

 

ஞானத்தைக் குறித்து ஏற்கெனவே சிந்தித்துள்ளோம். காண்க 22/10/2022, 25/10/2022. சுருக்கமாக:

 

ஞானம் அபர ஞானம், பர ஞானம் என இருவகைப்படும். அபரஞானத்தின் இரு படிநிலைகள்:  1. கேட்டல்; 2. சிந்தித்தல்; பர ஞானத்தின் இரண்டு படி நிலைகள்: 3. தெளிதல்; 4. நிட்டை கூடுதல். அபரம் – வெளி உலகுடன் தொடர்புடையது; பரம்- உள்ளுக்குள் நிகழ்வது.

மெய்ப்பொருளை உணரக் காரணமாக அமைவது மூன்று. அவையாவன: கேட்டல், சிந்தித்தல், தெளிதல். இதன் பின்னர் நிகழ்வது நிட்டைக்கூடுதல்.

 

இல்லறத்தைக் கடந்து துறவறவியலில் பயணித்துக் கொண்டிருப்பவர்கள் விரும்ப வேண்டியது பிறவாமை. பிறவாமை என்பது மீண்டும் இந்த உலகில் தோன்றாமை, அஃதாவது முத்தி (முக்தி) என்று அறிஞர் பெருமக்கள் எடுத்துரைக்கிறார்கள். இது நிற்க.

 

ஆக்கிய பொருள் அழியும்; ஆக்கா பொருள் நிலைக்கும். எதையுமே செயற்கையாகச் செய்தால் அது நிலைப்பது நிலையில்லை. இயற்கையாக அமையுமானால் அது காலம் கடந்தும் நிற்கும்.

 

நாம் இந்த உலகில் இருக்கும்போது செய்யும் செயல்களால் கிடைக்கும் பயன்களும் அதனால் வரும் புகழும் காலம் கடந்து நிற்குமானால் அதுவே பிறவாமை.

 

எனவே, பிறவாமைக்கு மறுபொருள் என்றும் “நிலைத்து நிற்றல்”. இஃது எப்படிக் கூடும் என்றால் எந்தக் காரியத்திலும் தம்மை முன்னிலைப்படுத்தாமல் விலகி நிற்றலால் கூடும். அஃது எப்படி நிகழும் என்பதற்கு நம் பேராசான் சொன்ன குறளை நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். காண்க 30/04/2022. மீள்பார்வைக்காக: 


வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும். - 362;  அவா அறுத்தல்

  

மறுபிறப்பு இல்லை என்பவர்களுக்கும் இயற்கையே இறை என்பவர்களுக்கும்: நீங்கள் மறைந்த பின்பும் உங்களின் எச்சங்கள்/புகழ் வேண்டாம் என்று முடிவு எடுங்கள். அதுவே ஆசையை அறுத்து விடும். உங்கள் புகழை காலமே நிர்ணயம் செய்யும், கவலை வேண்டாம். இதுதான் கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்பதன் பொருள்.

  

மெய்யுணர்தல் அதிகாரத்திற்குள் மீண்டும் வருவோம். ஞானத்தின் முதல் படியான கேட்டலை ஆறாவது பாடலாக அமைத்துள்ளார். இந்த உலகில் இருக்கும்போதே கல்வி, கேள்விகளால் மெய்ப்பொருளை ஆராய்பவர்கள் பிறவாமையின் முதல் படியைக் கடக்கிறார்கள் என்கிறார்.

 

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி. – 356; - மெய்யுணர்தல்

 

ஈண்டு கற்று மெய்ப் பொருள் கண்டார் = இந்த உலகில் இருக்கும்போதே கல்வி, கேள்விகளால் மெய்ப் பொருளை ஆராய்பவர்கள்; மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் = இங்கேயே உடலோடு அழியாமல் இருந்துவிட முடியாது என்பதை உணர்ந்து பிறவாமை என்னும் வழியில் பயணிப்பர்.

 

இந்த உலகில் இருக்கும்போதே கல்வி, கேள்விகளால் மெய்ப்பொருளை ஆராய்பவர்கள், இங்கேயே உடலோடு அழியாமல் இருந்துவிட முடியாது என்பதை உணர்ந்து பிறவாமை என்னும் வழியில் பயணிப்பர்.

 

இந்தப் பாடல் மூலம் கேள்வியின் முக்கியத்துவத்தைக் கூறினார். அடுத்துவரும் இரு குறள்களில் சிந்தித்தல், தெளிதல் என்ற அடுத்த இரு படிகளை விளக்குவார்,

 

நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page