23/10/2021 (242)
குறிப்பறிதல் பயிற்சியில் வசப்படும். அதற்கு மனதில் ஒருமை தேவை. வியாபகம் என்கிறார்களே அது கொஞ்சம் கொஞ்சமாக விரியும். அந்த வியாபகம் விரிய, விரிய - அது அடுத்த உள்ளத்தையும் தொடும். அதுவும் தான் போல உணரும். இதைத்தான் ஆங்கிலத்தில் unity conscious என்கிறார்கள். இதுதான் ஏழாம் அறிவு.
நம் பேராசான், மனிதரும் தெய்வமாகலாம் என்ற கருத்தை ஆங்காங்கே குறியீடுகளால் காட்டியுள்ளார். அதில் ஒன்றுதான், இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
மற்றவர்களின் மனதில் உள்ளதை, எந்த சந்தேகமும் இல்லாமல், தெளிவாக காண்பது மட்டுமல்லாமல் உணர்வது என்பது ஒரு அரிய செயல். உணர்ந்துவிட்டால் உதவலாம் தேவையிருப்பின். விலகலாம் அவசியம் இருப்பின். உள்ளத்தை ஊடுருவும் கலை கைவசமாகிவிட்டால், நாமும் தெய்வமாகலாம்.
“ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.” --- குறள் 702; அதிகாரம் – குறிப்பறிதல்
அகத்தது ஐயப்படாது உணர்வானை = ஒருவன் உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே எந்த சந்தேகமும் இல்லாமல் உணர்பவனை; தெய்வத்தோடு ஒப்பக் கொளல் = அவனை தெய்வமாகவே மதித்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மற்றவர்கள் உள்ளத்தை ஒருவன் உணர்வது எப்படி நமக்குத் தெரியும்?
மிகவும் சுலபம். அது அவன் செய்கைகளில் தெரியும்.
அந்த குறிப்பறிதலாவது எல்லாருக்கும் இருக்கனும்.
“மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்…
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழைப் போல தன்னைத் தந்து தியாகி ஆகலாம்
உருகி ஓடும் மெழுகைப் போல ஒளியை வீசலாம்.
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்…
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
யாருக்கென்று அழுதபோதும் தலைவனாகலாம்
மனம் மனம் அது கோவில் ஆகலாம் …
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் …” கவியரசர் கண்ணதாசன்; சுமைதாங்கி (1962)
உள்ளங்களை உணர்வோம். உயர்வோம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments