top of page
Search

ஒன்றாக நல்லது ... 323, 324

14/01/2024 (1044)

அன்பிற்கினியவர்களுக்கு:

300 ஆவது குறள் மிக முக்கியமான குறள். உண்மையிலும் உண்மையாக தாம் மெய்யாக் கண்டவற்றுள் பொய்யாமையைப் போன்று ஒரு நல்ல பண்பு இல்லை என்றார். பொய்யாமை என்றால் வாய்மை. வாய்மை என்றால் யாதொன்றும் தீங்கு இல்லாத சொல்லும் செயலும் என்பது நமக்குத் தெரியும்.

 

நம்மாளு: ஐயா, தீங்குகளில் ஒன்றே ஒன்றைத் தவிர்க்கவேண்டும் என்றால் எதனைச் சொல்லாலம் என்று நம் பேராசான் ஏதாவது சொல்லியிருக்கிறாரா?

 

ஆசிரியர்: தீங்கினில் உச்சம் என்றால் அதுதான் ஓர் உயிரினைக் கொல்லுதல். அதை முதலில் தவிருங்கள் என்கிறார். அஃதாவது, முதலில் பிற உயிர்களைக் கொல்ல மாட்டேன் என்று ஒரு முடிவினை எடுங்கள். அதன் பின் மற்ற தீங்குகளிலிருந்து விலகுங்கள் என் கிறார்.

 

இது ஏன் என்றால், மற்ற தீங்குகளைச் சரி செய்து கொள்ள, சில சமயம், வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால், ஓர் உயிரினைக் கொன்றபின் அந்த உயிரினை மீண்டெழச் செய்ய யாராலும் முடியாது. எனவே முதல் முடிவு இதுதான் என்கிறார். பின்னர்தான் அனைத்து பொய்யாமையும் என்கிறார்.

 

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்

பின்சாரப் பொய்யாமை நன்று. - 323; - கொல்லாமை

 

ஒன்றாக நல்லது கொல்லாமை = ஒரே ஒரு நல்ல செயலை நாளும் ஒழுக வேண்டும் என்றால் அதுதான் கொல்லாமை; அதன் பின் சாரப் பொய்யாமை நன்று = அதன்பின்னர், ஏனைய வாய்மைகளை ஒழுகுவது நன்றான முறைமையாம்; பொய்யாமை = வாய்மை; மற்று - வினைமாற்று.

 

ஒரே ஒரு நல்ல செயலை நாளும் ஒழுக வேண்டும் என்றால் அதுதான் கொல்லாமை. அதன்பின்னர், ஏனைய வாய்மைகளை ஒழுகுவது நன்றான முறைமையாம்.

 

நம் பேராசான், இப்படிப் படிப்படியாக, கையைப் பிடித்து மெல்ல, மெல்ல நம்மை அழைத்துச் செல்வார். என்ன ஓர் அழகு!

 

முதல் குறளில் அறச் செயல் என்றாலே அது கொல்லாமைதான் என்றார். காண்க 13/01/2024. இரண்டாவது குறளில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் தலை என்றார். காண்க 29/06/2021. நாம் மேலே கண்ட குறள் 323 இல் வாய்மையின் நெறியில் கொல்லாமைதான் முதலில் ஒழுக வேண்டியது என்றார்.

 

இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவும் தெளிவாகவும் சொல்ல விரும்பிய நம் பேராசான் அடுத்த குறளில் விரிக்கிறார்.

 

நல்ல வழி என்று எதைச் சொல்கிறார்கள் தெரியுமா? என்று ஒரு வினாவை எழுப்பி விடையையும் தருகிறார்.

 

நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்

கொல்லாமை சூழும் நெறி. - 324; கொல்லாமை

 

நல்லாறு எனப்படுவது யாது எனின் = வாழும் வாழ்க்கைக்கு ஒரு பொருள் இருக்க வேண்டும், மறைந்த பின்னும் புகழ் நிலைக்க வேண்டும் என்றால் அதற்குப் பயணிக்க வேண்டிய நல்ல வழி எது என்றால்; யாது ஒன்றும் கொல்லாமை சூழும் நெறி = எந்த ஓர் உயிரினையும் கொல்லாமல் வாழ்வை அமைத்துக் கொள்வேன் என்னும் வழிதான்.

 

வாழும் வாழ்க்கைக்கு ஒரு பொருள் இருக்க வேண்டும், மறைந்த பின்னும் புகழ் நிலைக்க வேண்டும் என்றால் அதற்குப் பயணிக்க வேண்டிய நல்ல வழி எது என்றால், எந்த ஓர் உயிரினையும் கொல்லாமல் வாழ்வை அமைத்துக் கொள்வேன் என்னும் வழிதான்.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page