09/10/2023 (947)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
நாகாக்க என்றார் குறள் 127 இல். சரி, அப்படியென்றால் பேசவே கூடாதா?
அப்படியில்லை.
பேசும் சொல் நல்ல சொல்களாக இருக்க வேண்டும். தீயச் சொல்களாக இருத்தல் கூடா என்கிறார். வாக்கின் வல்லமையை நாம் ஏற்கெனவே சிந்தித்துள்ளோம். காண்க 15/06/2021(113), 17/06/2021(115), 22/06/2021(120), 23/06/2021(121).
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம். நஞ்சு ஒரு துளிதான்: மொத்தப் பாலும் பயன்படுத்த முடியாது போகும்.
நாம் நல்ல பல கருத்துகளை மணிக்கணக்கில் பேசியிருக்கலாம். ஆனால், அதில் ஒரு சொல் தீச்சொல்லாக போகுமானால், மொத்தப் பேச்சுமே புறந்தள்ளப்படும்.
இந்தக் கருத்துக்கு நம் பேராசான் அமைத்திருக்கும் குறளிலும் ஒரு உத்தியைக் கையாண்டிருக்கிறார். அந்த உத்திக்கு கொண்டு கூட்டுப் பொருள்கோள் முறை. என்பார்கள்.
அஃதாவது, சொல்களை அங்கே, இங்கே என்று மாற்றிப் போட்டுவிடுவார்கள். ஆனால், பாடலில் யாப்பிலக்கணம் இருக்கும். அந்தப் பாடல்களை நாம் அப்படியே வாசித்தால் பொருள் சற்றும் சரியாக வராது. சொல்களை நாம் ஆய்ந்து எங்கெங்கு மாற்றி அமைக்க வேண்டுமோ அப்படி அமைத்துப் பொருள் கொள்ள வேண்டும். இதுதான் கொண்டு கூட்டுப் பொருள்கோள்.
சொல்ல வேண்டிய கருத்தினை மேலும் வலியுறுத்த அமைத்தக் குறள்தான் இது:
“ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.” --- குறள் 128; அதிகாரம் – அடக்கமுடைமை
இந்தக் குறளுக்கு அப்படியே பொருள் எடுத்தால் எடுப்பாக இருக்காது. முதலில் இதனைச் சற்று மாற்றி எழுதிக் கொள்ளலாம்.
“தீச்சொல் ஒன்றானும் உண்டாயின் பொருட்பயன் நன்று ஆகாது ஆகி விடும்”
(வந்து விழுந்தச் சொல்களில்) தீயச் சொல் ஒன்றுதான் என்றாலும் பேசிய மொத்தப் பேச்சின் பொருள் பயன் நன்று ஆகாது ஆகி விடும்.
கொண்டுக் கூட்டுப் பொருள் எடுக்கும்போது உரைகள் வேறுபடுவதும் இயல்புதான்.
அறிஞர் பெருமக்கள் சிலரின் உரைகளைப் பார்ப்போம்.
புலவர் புலியூர் கேசிகன்: தீய சொற்களாலே வந்தடைந்த பொருளாகிய நன்மை ஒன்றாயினும் ஒருவனிடம் இருந்தாலும், அதனால் எல்லா நன்மையும் இல்லாமற் போய்விடும்.
மூதறிஞர் மு. வரதராசனார்: தீய சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.
பேராசிரியர் இரா. சாரங்கபாணி: ஒரு சொல்லே ஆயினும் பொருளால் பிறர்க்குத் துன்பம் உண்டாகுமாறு ஒருவன் சொல்லுவானாயின், அது நாவடக்கமின்மையைக் காட்டிவிடும்.
பரிமேலழகப் பெருமான்: தீயவாகிய சொற்களின் பொருள்களால் பிறர்க்கு வரும் துன்பம் ஒன்றாயினும் ஒருவன் பக்கல் உண்டாவதாயின்அவனுக்குப் பிற அறங்களான் உண்டான நன்மை தீதாய்விடும். தீயசொல்லாவன = தீங்கு பயக்கும் பொய், குறளை, கடுஞ்சொல் என்பன.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments