09/08/2022 (528)
ஒரு சின்ன தப்புதானே சார், அதற்கு போய் அவ்வளவு பெரிய தண்டனையா?
தண்டனையோ, உயர்வோ செயலுக்கல்ல; அந்த செயலால் விளையும், விளையப்போகும் பயனுக்கு!
ஒரு கதை:
இரண்டு பேரிடம் தனித்தனியாக இருண்டு கிடக்கும் ஒரு அறையைக் கொடுத்தார்களாம். அந்த அறை முழுவதையும் நிரப்பனும். எதை வைத்து வேண்டுமானாலும் நிரப்பலாம். அப்படி நிரப்பினால் உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்று அறிவித்தார்களாம். ஆனால், சில நிபந்தனைகளை விதித்தார்களாம். ஒன்று: அதை ஒரே நாளில் செய்ய வேண்டும்; இரண்டாவது: அதற்கு ஆகும் செலவு அவர்களையே சாரும் என்றார்களாம்; மூன்றாவது காசும் ரொம்ப செலவு செய்யக்கூடாது!
என்னத்தைக் கொண்டு அடைப்பது? இருப்பதிலேயே காசும் கம்மியாக இருக்கனும், ரொம்ப இடத்தையும் நிரப்பனும்ன்னு நம்மாளு யோசனை பண்ணானாம். அவனுக்கு ஒரு உத்தி (அதாங்க ஐடியா - Idea ன்னு சொல்வோமே அது) வந்ததாம். ஒரு மாட்டு வண்டியை பிடிச்சானாம். நேராக பஞ்சுசந்தைக்கு போய் பொதி, பொதியாக பஞ்சை எடுத்து வந்து அந்த அறை முழுவதையும் நிரப்பி விட்டானாம்.
அடுத்தவன் என்ன பண்ணான்னு பார்க்கலாம்ன்னு போனால், அவன் அந்த அறையிலே எதுவுமே நிரப்பவில்லையாம். அது மட்டுமில்லாமல், அங்கே இருந்த கொஞ்ச நஞ்சம் தட்டு, முட்டு சாமான்களையும் வெளியே தூக்கிப் போட்டுட்டு சுத்தம் பண்ணி, காலியா வைத்திருந்தானாம். அந்த அறை முழுவதும் ரொம்பவே காலியாக இருந்ததாம்.
நேரம் வேற ஆகிவிட்து. இதற்கு மேல அவனாலே ஒன்றும் செய்ய முடியாதுன்னு நம்மாளுக்கு பரம திருப்தி. நமக்குத்தான் ஒரு கோடின்னு போய் காத்திருந்தானாம்.
இரண்டு பேரும் என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்க்க வந்தார்களாம். நம்மாளு மகிழ்ச்சியாக அவனின் திறமையைக் காட்டினான். அந்த அறைக்குள்ளே நுழையவே முடியாத அளவுக்கு பஞ்சினால் நிரம்பி இருந்ததாம்! சரின்னுட்டு அடுத்த அறைக்கு போனார்களாம்.
அவன், வாங்க, வாங்கன்னு அந்த பழைய இருண்ட அறைக்குள்ளே அழைத்துக் கொண்டு போனானாம். அந்த இருண்ட அறை, இப்போது தூய்மை செய்யப்பட்டு அங்கே ஒரு விளக்கு பொறுத்தப் பட்டு இருந்ததாம்.
என்ன தம்பி, இந்த அறையை நிரப்ப வேண்டும் என்பதுதானே நிபந்தனை? நீங்க ஒன்றையும் இட்டு நிரப்பவில்லையே என்றார்களாம்.
ஐயா, இந்த இருண்ட வீட்டினை சுத்தம் செய்து ஒரு விளக்கைப் பொறுத்தி ஒளியைக் கொண்டு நிரப்பியிருக்கிறேன் என்று சொன்னானாம். அந்த ஒளி எல்லா இடத்தையும் நிரம்பி இருப்பதைப் பாருங்கள் என்றானாம்.
“இருண்ட வீட்டுக்கு ஒரு விளக்கு” ன்னு விளக்கினான். பரிசு யாருக்கு கிடைச்சுருக்கும்ன்னு சொல்லத் தேவையில்லை.
செயல் சிறியதாக இருக்கலாம். விளைவு பெரியதாக இருக்கலாம். சின்ன மாத்திரை வில்லைகள்தான் பெரிய, பெரிய நோய்களை குணப்படுத்துகிறது.
ஒரு துளி விஷம்தான்: ஒரு குடம் பாலும் வீணாகப் போக!
சரி இந்த கதையெல்லாம் எதற்குன்னு கேட்கறீங்க? அதானே?
ஆசிரியரைக் காணோம். அதான், மகாபாரதத்தில் வரும் ஒரு கதையை உல்டா பண்ணி அடிச்சு விட்டேன்.
பிடிச்சிருந்தால் like பண்ணுங்க, share பண்ணுங்க… வேற எதாவது சொல்லனும்னா நேரிலே பார்க்கும் போது என் காதுகிட்ட சொல்லுங்க ப்ளிஸ்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Opmerkingen