09/03/2024 (1099)
அன்பிற்கினியவர்களுக்கு:
இரு கை தட்டினால்தான் ஓசை எழும்; காவடித் தண்டின் இரு பக்கமும் சம அளவில் அன்பிருந்தால்தான் பயணம் இனிமையானதாக இருக்கும் என்கிறாள்.
அவள் காதல் வழியில் இருக்கும் போது, அவளின் உயிரின் மேல் ஒரு காவடி என்றாள். அதன் ஒரு பக்கம் காமம்; மறு பக்கம் நாணம். இந்த இரண்டும் என்னை ஒரு வழி செல்லாமல் பொறுக்க முடியாத் துன்பத்தைத் தந்து அலைக்கழிக்கின்றன என்றாள். காண்க 21/02/2024. மீள்பார்வைக்காக:
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்
நோனா உடம்பின் அகத்து. - 1163; - படர் மெலிந்து இரங்கல்
இப்போது மணம் முடித்தாகிவிட்டது. காதலனே கணவன் ஆனான். ஒரு முக்கியமான வேலையாகப் பிரிந்து சென்றுள்ளான். இப்போதும், அந்தக் காவடியாட்டத்தைத் தொடர்கிறாள்.
ஒருதலையான் இன்னாது காமங்காப் போல
இருதலை யானும் இனிது. – 1196; தனிப் படர் மிகுதி
ஒரு தலையான் காமம் இன்னாது = ஒரு தலையாக அன்பிருந்தால் இனிக்காது; காப் போல இருதலை யானும் இனிது = காவடியைப் போல இரு பக்கமும் சம அளவில் அன்பும் வேட்கையும் இருக்க வேண்டும். அப்போதுதான் இனிக்கும்.
ஒரு தலையாக அன்பிருந்தால் இனிக்காது. காவடியைப் போல இரு பக்கமும் சம அளவில் அன்பும் வேட்கையும் இருக்க வேண்டும். அப்போதுதான் இனிக்கும்.
அவரிடம் அன்பில்லையே நான் என்ன செய்வேன் என்று புலம்புகிறாள்.
காதலின் கடவுள் என்று காமனைச் சொல்கிறார்கள். அவன் ஏன் என்னை மட்டும் ஆட்டுவிக்கிறான்? அவரை அவன் தாக்க மாட்டானா? பெண்களை நோக்கியே அம்பினை எய்கிறான்!
ஓஒ.. ஒரு முறை சிவ பெருமான் மீது அம்புவிட அவர் அவனை எரித்துவிட்டார் என்ற பழங்கதை அவனுக்குக் கவனம் வந்துவிட்டதா? ரதி வந்து அவனைக் காப்பாற்றினாளே!
என்னவர் ஒன்றும் சிவ பெருமான் அல்லவே. நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்துவிட! எதற்கு இப்படி அவன் நடுங்குகிறான். என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் காண மாட்டானா?
தோழி: நான்கு பக்கம் துன்பம் வந்தால் நாத்திகர்க்கும் கடவுள் உண்டு ….
அவள்: காண்பதெல்லாம் துயரம் என்றால் கடவுளுக்கும் கடவுள் உண்டு!
எனக்கும் அந்தப் பாடல் தெரியும். நினைப்பதற்கு நேரம் இல்லை என்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி அவர்களின் வைர வரிகள்தாம் அவை.
நினைப்பதற்கு நேரமில்லை, நினைத்து விட்டால் மறப்பதில்லை
… காதலிலே விழுந்தவர்கள் காலத்தையும் மதிப்பதில்லை
காரியத்தில் துணிந்தவர்கள் வேறெதையும் நினப்பதில்லை …
பழி வாங்கும் நினைவு வந்தால் பசி கூட எடுப்பதில்லை
பாசத்திலே நிறைந்த மனம் பழி வாங்க நினைப்பதில்லை…
… நான்கு பக்கம் துன்பம் வந்தால் நாத்திகர்க்கும் கடவுள் உண்டு
காண்பதெல்லாம் துயரம் என்றால் கடவுளுக்கும் கடவுள் உண்டு
… நினைப்பதற்கு நேரமில்லை, நினைத்து விட்டால் மறப்பதில்லை – கவிஞர் வாலி, நினைப்பதற்கு நேரமில்லை, 1963
சரி, நாம் குறளுக்கு வருவோம்.
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான். – 1197; - தனிப்படர் மிகுதி
காமன் ஒருவர் கண் நின்றொழுகுவான் = காமன் ஆனவன் என்னிடம் மட்டுமே நின்று தாக்குகிறான்; பருவரலும் பைதலும் காணான் கொல் = நான் படும் வருத்தத்தையும் துன்பத்தையும் அவன் காணமல் இருப்பதென்ன?
காமனானவன் என்னிடம் மட்டுமே நின்று தாக்குகிறான். நான் படும் வருத்தத்தையும் துன்பத்தையும் அவன் காணமல் இருப்பதென்ன?
நான் படும்பாட்டைக் கவனித்தால் அந்தக் காமன் அவரிடமும் சென்று தாக்க மாட்டானா? என்று அவளின் இயலாமையை வெளிப்படுத்துகிறாள்.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments