09/11/2021 (259)
ஒருவன் தன் காலத்துக்குள் கற்க வேண்டியதைக் கற்க வேண்டும். அவ்வாறு கற்று அறிந்தால் அவனுக்கு எந்த நாடும், எந்த ஊரும் சொந்தம் தான் என்பதைச் சொன்னார் குறள் 397ல். இது இம்மைப் பயன், இருக்கும் போதே அனுபவிப்பது.
மறுமைப் பயன் இருக்கா? கல்வியைக் கற்றால் அவன் காலம் கடந்தும் வாழ்வானா? இந்தக் கேள்வியை யாராவது எழுப்புவாங்கன்னு நம்ம பேராசானுக்குத் தெரிந்து இருக்கும்ன்னு நினைக்கிறேன். அடுத்த குறளிலேயே அதற்கு உறுதி சொல்கிறார்.
ஒரு தடவை ஒழுங்கா கற்று விட்டால் அது அவனுக்கு ஏழு பிறப்புக்கும் உதவும் என்கிறார்.
ஏழு பிறப்பு இருக்கா? அது உனக்குத் தெரியுமான்னு கேட்காதீங்க. எனக்குத் தெரியாது.
ஆனால், இன்றைய அறிவியல் உலகம், நம்ம DNA – Deoxyribo Nucleic Acid, அதாவது தமிழில் சொன்னா ‘இனக்கீற்று அமிலம்’. இந்த DNA ன் பண்புகள் ஏழு தலைமுறைகளைக் கடக்கும் என்று சொல்கிறது. மரபனுக்கள் (Genes) என்று சொல்லப்படும் அனுக்களின் தாக்கம் ஏழு தலைமுறைகளுக்கு ஓங்கி எதிரொலிக்குமாம். பதினான்கு தலைமுறை அளவுக்குகூட அதன் தாக்கம் இருக்கலாம் என்று அறிவியல் சொல்கிறது.(இங்கே சொடுக்கவும்). நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஏழு தலைமுறைகளைத் தாக்குமாம் (இங்கே சொடுக்கவும்). அறிவியல் கண்டுபிடித்துள்ளது.
நாம நம்ம தமிழ் இலக்கியங்களை வெறும் பாடல்களாகப் பார்த்துட்டோம். அது இலக்கை இயம்பும் இயல் ஆக பார்க்க மறுப்பதனால், அது குறித்து ஆராய்ச்சி செய்வதைப் புறந்தள்ளுகிறோம். இது நிற்க.
நாம குறளுக்கு வருவோம்.
“ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.” --- குறள் 398; அதிகாரம் - கல்வி
ஒருவற்கு = ஒருவனுக்கு; தான் ஒருமைக்கண் கற்ற கல்வி = தான் ஒரு பிறப்பில் கற்ற கல்வி, பெற்ற அறிவு; எழுமையும் ஏமாப்பு உடைத்து = ஏழு பிறப்புக்கும் சென்று உதவும்.
நாம ஒழுங்காக படிக்காமல் விட்டா நமக்கு மட்டும் தவறு செய்யலை, ஏழு தலைமுறகளைக்கும் தவறு இழைக்கிறோம் என்று பொருள்.
‘எழுமை’யைப் பற்றி நம்ம வள்ளுவப் பெருந்தகை பல குறள்களில் குறிப்பால் வலியுறுத்தியுள்ளார் என்று என் ஆசிரியர் சொல்லியிருக்கார். தொடருவோம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Really