07/02/2023 (705)
அருணகிரிநாதப் பெருமான், முருகனை முதன்மைப்படுத்திப் பாடிய பாடல்கள் திருப்புகழ்.
திரு ஆவினன் குடி என்று அழைக்கப்பெறும் பழனியில் பாடிய “நாத விந்து கலாதீ நமோ நம...” என்ற பாடல் மிகவும் ஆழமானக் கருத்துகள் கொண்டது. அதிலே வரும் சில வரிகளைப் பார்க்கலாம்.
இராமன் இராவணனை அழித்தார். விசேடம் ஒன்றும் இல்லை. கண்ணன் துரியோதனாதியர்களை அழித்தார். அதிலேயும் ஒன்றும் விசேடம் இல்லை. நரசிம்மர் இரண்யனை அழித்தார். அதிலேயும் விசேடம் இல்லை. இப்படி பல சொல்லிக் கொண்டேப் போகலாம். ஆனால், முருகா, நீ என்ன செய்தாய் தெரியுமா?
நீ பகைவர்களைச் சேதம் செய்தாய், தண்டனை அளித்தாய் அது விநோதமாக இருக்கிறது முருகா என்கிறார். அதிலே என்ன விநோதம்?
நீ சூரனின் செருக்கை மட்டும் தான் அழித்தாய். ஆனால், அவனுக்கும் கருணைக் காட்டி, அவனைச் சேவல் கொடியாகவும், உனக்கு வாகனமாகவும், மயிலாக, மாற்றி உன் அருகிலேயே வைத்துக் கொண்டாய் முருகா!
உன்னை வணங்குபவர்கள், மயிலையும் வணங்குகிறார்கள். இது அதிசயமில்லையா? என்று அருணகிரிநாதப் பெருமான் முருகனைப் பார்த்துக் கேட்கிறார்.
“...பரசூரர்
சேத தண்ட விநோதா நமோ நம
கீத கிண்கிணி பாதா நமோ நம
தீர சம்ப்ரம வீரா நமோ நம ……” --- திருப்புகழ்; அருணகிரிநாதப் பெருமான்
இதுதான், அருணகிரிநாதப் பெருமான் தலைமைக்கு தரும் குறிப்பு. தவறுகளை மட்டும் தண்டி. தண்டித்தாலும், அவர்களுக்கும் இரக்கம் காட்டு என்பது குறிப்பு.
இதை நம் பேராசானும் வலியுறுத்துகிறார். நம்மை அழிக்க நினைக்கும் பகைவர்களைத் தண்டி, திருத்து. அதே சமயம், அவர்களிடமும், இரக்கத்தைக் காட்டு என்கிறார்.
“ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.” --- குறள் 579; அதிகாரம் – கண்ணோட்டம்
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் = நம்மை அழித்து விட்டுதான் மறுவேலை என்று இருப்பவர்களிடமும்; கண்ணோடிப் = இரக்கம் காட்டி; பொறுத்து ஆற்றும் பண்பே தலை = அவர்களின் செருக்கை மட்டும் அழித்து அவர்களுக்கும் இரக்கத்தைக் காட்டும் பண்பு இருக்கிறதே அதுதான் தலையான பண்பு.
நம்மை அழித்து விட்டுத்தான் மறுவேலை என்று இருப்பவர்களிடமும்; அவர்களின் செருக்கை மட்டும் அழித்து, அவர்களுக்கும், இரக்கத்தைக் காட்டும் பண்பு இருக்கிறதே, அதுதான் தலையான பண்பு.
என்ன அழகாக அடுக்கிக் கொண்டே வருகிறார் பாருங்கள் நம் பேராசான். இரக்க குணத்தை நம் மனதில் பதிய வைக்க வேண்டுமென்று பல குறள்களைச் சொல்லி வந்தப் பெருமான், அதிலே கடமைத் தவறக் கூடாது என்று எச்சரித்து, அப்படியே ஒருவருக்குத் தண்டனைத் தந்துதான் ஆக வேண்டுமென்றால், அதையும் செய்து, அவர்களுக்கும் கருணை காட்டுவது அவசியம் என்று மெதுவாக நம்மை அழைத்து வந்துவிட்டார்.
இந்த அதிகாரத்திற்கு முத்தாய்ப்பாக ஒரு குறளை வைக்கப் போகிறார். அதனை நாளைப் பார்க்கலாம் என்றார் ஆசிரியர். திருப்பங்கள் நிறைந்தது கண்ணோட்டம் எனும் அதிகாரம்!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments