15/02/2023 (713)
ஒற்று சொல்வதை அப்படியே நம்பிவிடலாமா? என்றால் அது கூடாதாம்!
ஒற்றும் சில சமயம் தடம் மாறக்கூடும். சரி, அதற்கு என்ன செய்யலாம்?
ஒன்றுக்கு இரண்டாய் ஒற்று இருக்க வேண்டுமாம். ஒருவன் சொன்னதை உறுதிப்படுத்தும் விதமாக, மற்றொரு ஒற்றும் அதே செய்தியைத் தருகிறாரா என்பதைக் கவனித்து நடக்கனுமாம்.
“ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.” --- குறள் 588; அதிகாரம் – ஒற்றாடல்
ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் = ஒரு ஒற்றன் அறிந்துவந்து சொன்னச் செய்திகளையும்; மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல் = வேறு ஒரு ஒற்றனாலும் அறிந்து வரச்செய்து, அதிலே ஒப்புமை இருக்கிறதா என்பதைக் கண்டுபிடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
சரி, ஒருவருக்கு ஒருவர் வேறுபட்ட செய்திகளைத் தந்தால்? குழப்பம்தான் மிஞ்சும்! இதே கேள்வி, நம்ம பேராசானுக்கும் இருந்திருக்கு!
என்ன சொல்கிறார் என்றால், முதலில் ஒற்றுக்கு ஒற்று வைப்பது என்பது ஒருவருக்கொருவர் இருப்பது தெரியாமல் இருக்கனுமாம்.
அதுவும் சரி. ஒருத்தனுக்கு இவனும் நம்மைப் போலவேதான் என்று தெரியுமானால் இருவரும் கூட்டு சேரக் கூடும்! இது முக்கியம்.
மூன்று பேர் ஒரு செய்தியை ஒரே விதமாகத் தருவது என்பதற்கு வாய்ப்பு (probability) குறைவு. அதனால்?
மூன்று பேர் இருக்கட்டும் என்கிறார்!
“ஒற்றுஒற்று உணராமை ஆள்க உடன்மூவர்
சொல்தொக்க தேறப் படும்.” --- குறள் 589; அதிகாரம் – ஒற்றாடல்
ஒற்று ஒற்று உணராமை ஆள்க = ஒற்றர்களை வழி நடத்தும் போது ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்;
உடன் மூவர் சொல் தொக்க தேறப்படும் = அங்கனம், ஆளப்பட்ட ஒற்றர்கள் மூவரை, ஒரு செய்தியைக் கண்டு அறியுமாறு செய்தால், அவர்கள் சேகரித்து வரும் செய்திகளில் இருக்கும் உண்மை நிலையை உறுதிப்படுத்த முடியும்.
தொக்க = ஒக்க, ஒப்பு நோக்க; தேற = உறுதிப் படுத்த, தெளிவு பெற
ஒற்றர்களை வழி நடத்தும் போது ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்; அங்கனம், ஆளப்பட்ட ஒற்றர்கள் மூவரை ஒரு செய்தியைக் கண்டு அறியுமாறு செய்தால், அவர்கள் சேகரித்து வரும் செய்திகளில் இருக்கும் உண்மை நிலையை உறுதிப் படுத்தமுடியும்.
இதுவும் உறுதியா என்றால் ஓரளவிற்குத்தான்! அப்போது என்ன செய்ய வேண்டும்?
இதற்கான பதிலை முன்பே சொல்லிவிட்டார்! இந்த அதிகாரத்தின் முதல் குறளே அதுதான். காண்க 09/02/2023 (707) மீள்பார்வைக்காக:
“ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.” --- குறள் 581; அதிகாரம் – ஒற்றாடல்
குழப்பம் வந்தால் அறிவு துணை செய்யும். குறிப்பாக அறிஞர் பெருமக்களின் நூல்கள், அனுபவங்கள், வார்த்தைகள் துணை செய்யும்.
ஒற்றும் சாதாரன விஷயம் இல்லை என்கிறார்.
வெளுத்தது எல்லாம் பாலுமல்ல; கருத்தவன் எல்லாம் மோசமும் அல்ல.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments