top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

ஒற்றும் உரைசான்ற நூலும் ... 581

09/02/2023 (707)

சமுதாயத்தை மூன்றாகப் பிரிக்கலாமாம். இந்தச் செய்தியை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். மீள்பார்வைக்காக காண்க 13/06/2021 (111).

அதாவது: பகை, நொதுமல், நட்பு இப்படின்னு சமுதாயத்தை மூன்றாக பிரிக்கலாம். பகை, நட்பு ஆகிய சொற்கள் நமக்குத் தெரியும். ஆனால் ‘நொதுமல்’ ன்னா என்னன்னு கேட்கறீங்க? அது ஒன்றுமில்லை பகையும் இல்லாமல், நட்பும் இல்லாமல் இருக்கும் இல்லையா அந்தக் கூட்டம்.


கண்ணோட்டம் எனும் அதிகாரத்தில் எல்லோருக்கும் இரக்கம் காட்ட வேண்டும் என்றும் அதைச் செய்யும் முறைமையையும் சொன்னார்.


சரி, இரக்கம் காட்ட வேண்டியதுதான். அதிலே ஒன்றும் தப்பில்லை. ஆனால், தலைவனுக்கு, இவர்கள் இவ்வாறு செய்வார்கள், அல்லது செய்யப் போகிறார்கள் எனும் நுட்பம் தெரியனுமா இல்லையா? செய்தபின் இரக்கம் காட்டுவதைவிட, அந்த இரக்கம் காட்ட வேண்டியச் செயலையே தடுத்துவிட்டால்?


அதுதானே சரியாக இருக்கும்! ... என்று நினைத்த நம் பேராசான், அடுத்த அதிகாரமாக ஒற்றாடல் எனும் 59 ஆவது அதிகாரம் வைத்துள்ளார்.


கண்ணோட்டத்தில் இருந்து தொடங்கும் இந்த ஒற்றாடல் அதிகாரத்தின் முதல் குறள் ‘கண்’ என்று முடிகிறது!


ஓரு தலைவனுக்கு இரண்டு கண்கள் இருக்கனுமாம்.


நம்மாளு: என்னது ஐயா இது? இரண்டு கண்கள் தான் எல்லாருக்குமே இருக்கே! எனக்கே இருக்கு. பிறகு என்ன?


ஆசிரியர்: தம்பி, அவர் அந்தக் கண்களைச் சொல்லவில்லை. அது மட்டுமல்லாமல், அந்தக் கண்கள் காணக்கூடிய தூரம் மிகவும் குறைவுதான். நம் வள்ளுவப் பெருமான் கூறும் கண்களே வேறு. இது தலைமைக்குத் தம்பி!


நம்மாளு: ங்கே...


தலைமை எல்லாவற்றையும் தன் கண்களாலேயே கண்காணிக்க முடியாது. அவர்களுக்கு இரகசியக் கண்கள் தேவை. கண்காணிப்பு புகைப்பட கருவிகள் (surveillance cameras) போல. எல்லா இடத்திலும் வைக்க முடியுமா என்றால் அதுவும் முடியாது. அந்தக் காலத்தில் அதுபோன்ற கருவிகளும் கிடையாது. அப்போது?


அதற்குத்தான் ஒற்றர்களை வைத்திருந்தார்கள். இது ஒரு விதமானக் கண்.அதாவது, ஊனக்கண்!

மற்றொரு கண் சற்று வித்தியாசமானது. அது ஞானக்கண்.

காட்சியில் பிழை இருக்கும். ஊகிப்பதிலும் பிழை இருக்கும். ஆனால், பெரியவர்கள் உய்த்து, உணர்ந்து எழுதிய நூல்களில் பிழை இருக்காது. ஆகையினால், தலைமையில் இருப்பவர்கள், துறை சார்ந்த அறிஞர் பெருமக்கள் எழுதிய நூல்களின் துணைக் கொண்டு தனக்கு கிடைத்தச் செய்திகளை ஆராய்ந்து முடிவு எடுக்கனுமாம். அதாவது, தலைவர்கள் படித்தவர்களாக இருக்கனும். அது மட்டும் போதாது, எப்போதும் படிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.


நாம் ஏற்கனவே பார்த்ததுதான். தத்துவார்த்தக் கருத்துக்களை நிருவ முக்கியமான அளவைகள் (பிரமாணங்கள்) மூன்று என்றும், அவை, காண்டல் அளவை, கருதல் அளவை, உரை அளவை என்றும், அதிலும் உரை அளவையாகிய மெய்ப் பொருள் ஞானிகளின்/நீத்தார்களின் சொற்கள் சிறந்தது என்றும் கண்டோம்.


ஆகையினால், தலைமைக்கு ஒற்றும், உரை சான்ற நூலும் இரு கண்கள்.


ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்

தெற்றென்க மன்னவன் கண்.” --- குறள் 581; அதிகாரம் – ஒற்றாடல்


தெற்றென = தெளிவாக; (தெற்றென்க = முதல் நிலையாக வந்த வியங்கோள்);


ஒற்றும் உரைசான்ற நூலும் = ஒற்றும், சிறந்த நூல்களும், அதாவது அறிஞர் பெருமக்களின் கருத்துகளும்; இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் = இவை இரண்டும் தலைமைக்கு இரு கண்கள் எனத் தெளிக.


ஒற்றும், சிறந்த நூல்களும், அதாவது அறிஞர் பெருமக்களின் கருத்துகளும்; இவை இரண்டும் தலைமைக்கு இரு கண்கள் எனத் தெளிக.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.

(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)




6 views0 comments

Comments


bottom of page