15/11/2022 (621)
அந்தக் காலத்தில் வீதிகளிலே, ‘அம்மி குழவிக்கு பொளி போடறது’ அல்லது ‘அச்சு போடறது’ன்னு கூவிக் கொண்டு செல்வார்கள்.
‘பொளிதல்’ அல்லது ‘பொள்ளுதல்’ என்றால் சின்ன, சின்னதாக துளையிடுதல்.
தற்காலத்தில், அம்மி குழவிகளுக்கு வேலையில்லாமல் போய்விட்டதால், அந்தத் தொழிலாளர்களும் காணாமல் போய்விட்டார்கள்.
இது நிற்க.
ஆனால், ‘பொள்ளென வா’ என்றால் ‘சீக்கிரம் வா’ என்று பொருள். ‘பொள்ளு’ என்பது விரைவுக் குறிப்பு.
‘ஒள்ளியார்’ என்றால் அறிவில் மிக்காரையும், ஒத்தாரையும் குறிக்கும். அது பாடல்களில் வரும் போது ‘ஒளியார்’ என்று சுருங்கியும் வரலாம். அதாவது, விகாரத்தால் தொக்கும்!
ஆக, ‘ஒளியார்’ என்றால் சான்றோர்கள்.
‘ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல்’ என்றால் அறிவுடையவர்கள் முன் நாமும் நம் அறிவினை வெளிப்படுத்துதல். அதாவது, எங்கே நம் அறிவை வெளிப்படுத்த வேண்டுமோ, அங்கே நாம் அறிவினை வெளிப்படுத்தவேண்டும். அங்கேதான் நமது நூலறிவையும், சொல்வன்மையையும் காட்டனும்.
அதாவது, அவையறிந்து பேச வேண்டும்.
மாறாக, அறிவில் வளர்ந்து கொண்டு இருப்பவர்களின் இடையில், அல்லது ஒன்றும் தெரியாமல் வெள்ளந்தியாக இருப்பவர்களின் மத்தியில், நாமும் அவர்களைப் போல் இருந்து உரையாடுவது என்பது மிக முக்கியம். அதாவது, அவர்களின் நிலைக்கு இறங்கிச் சென்று உரையாட வேண்டும்.
“ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல்.” --- குறள் 714; அதிகாரம் – அவையறிதல்
வான் சுதை = வெள்ளைச் சுண்ணாம்பு;
ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் = அறிவுடையவர்கள் முன் நாமும் நம் அறிவினை வெளிப்படுத்துதல்;
வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல் =வெள்ளந்தியாக இருப்பவர்கள் முன் நாமும் வெள்ளந்தியாக இருத்தல்.
அறிவுடையவர்கள் முன் நாமும் நம் அறிவினை வெளிப்படுத்துதல் மற்றும் அறியாதவர்கள் முன் நாமும் வெள்ளந்தியாக இருத்தல் என்பது அவையறிந்து பேச வேண்டும் என்பவர்களுக்கு நம் பேராசான் தரும் குறிப்பு.
சரி, பொள்ளுதலே இந்தக் குறளிலே இல்லையே, பின்னர் ஏன் பொள்ளுதலைப் பற்றி ஆரம்பித்தாய் என்று கேட்கிறிர்கள் அதானே?
விடமாட்டீங்கன்னு எனக்குத் தெரியாதா? நாளை பார்ப்போம்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்.
very essential for successful communication in a group otherwise செவிடன் காதில் ஊதிய சங்கு, nothing will be achieved