15/10/2023 (953)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
ஒழுக்கம் உயிரினும் மேலானது. அப்படிப்பட்ட ஒழுக்கத்தை விரும்பி ஓம்பிக் காக்கவும் என்று அதனின் சிறப்பினை முதல் இரண்டு குறள்களில் எடுத்துச் சொன்னார்.
அடுத்து வரும் குறளை நாம் ஏற்கெனவே சிந்தித்துள்ளோம் காண்க 06/09/2021(195), 24/07/2022 (513).
“ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.” --- குறள் 133; அதிகாரம் – ஒழுக்கமுடைமை
ஒழுக்கமாக இருந்தால் ஒரு குடியினுள் இயைந்து இருக்க இயலும்(fit). இல்லை என்றால் இழி பிறவியாய் கருதப்பட்டு ஒதுக்கப்படுவோம் (misfit).
இந்தக் குறள் எண் 133 என்பதனைக் கவனியுங்கள். 133 அதிகாரங்களின் சாரமே இதுதான். ஒழுக்கம் அமைய அனைத்தும் அமையும்.
நூல் என்றால் என்னவென்று பார்ப்போம்.
இந்தக் கேள்விக்குத் தொல்காப்பியப் பெருமான்:
நூல் என்றால் தொடக்கம் முதல் முடிவு வரை எடுத்துக் கொண்டப் பொருளில் மாறுபாடில்லாமல் (அஃதாவது குழப்பாமல், தெளிவாக) தொகுத்தும், வகுத்தும் (விரித்தும்) அந்தப் பொருளின் ஆழ அகலத்தை விளக்கிச் சொல்வது என்கிறார்.
“நூல் எனப்படுவது நுவலுங் காலை
முதலும் முடிவும் மாறுகோள் இன்றி
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
உள்நின் றகன்ற உரையொடு புணர்ந்து
நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே.”--- சூத்திரம் 1422; பொருளதிகாரம், செய்யுளியல், தொல்காப்பியம் (புலவர் வெற்றியழகனார் உரை)
நூல் (Text/Reference Book) எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயேச் சொல்லிச் சென்றுள்ளார்கள் என்பது வியப்பிலே ஆழ்த்துகிறது. அதற்கு முன்பு பல நூல்கள் இருந்துள்ளன என்பதுதான் தமிழின் தனித்துவம்.
சரி, இந்த நூல்கள் எத்தனை வகைப்படும் என்றால், நம் தொல்காப்பியப் பெருமானார் நால்வகைப்படும் என்கிறார். அவையாவன:
சூத்திரம், ஓத்து, படலம், பிண்டம் என்கிறார்.
சூத்திரம் என்பது சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது. தொல்காப்பியப் பாடல்கள், திருக்குறள் பாடல்கள் போன்றவை அவ்வாறே.
அறிவியலில் சூத்திரங்களை Formula என்பர். F = mA. இது நியூட்டன் பெருமானாரின் இரண்டாம் விதி. இதனை விரித்தால் இதுவும் விரியும்! அதிக நிறை கொண்டப் பொருளை முடுக்கிவிட அதிக சக்தி தேவை!
ஓத்து என்பது ஒத்தக் கருத்துகளை மணி மணியாகக் கோர்த்து ஒரு மாலை போலத் தொடுத்துச் சொல்வது.
படலம் என்றால் ஒரு பொருளை எடுத்துச் சொல்லும் பொருட்டு அதைச் சுற்றி நிகழும் பலவற்றினைப் பற்றியும் பொதுவாகச் சொல்லி விரிப்பது.
பிண்டம் என்றால் பெருநூல். ஒரே நூலில் சூத்திரம், ஓத்து, படலம் என்று அமைந்திருந்தால் அதனைப் பிண்டம் எனலாம் என்கிறார் நம் தொல்காப்பியனார்.
சரி, இந்தத் தொல்காப்பிய விளக்கம் இங்கே ஏன் வந்தது என்று கேட்கிறீர்களா? அடுத்து வரும் குறளில் நம் பேராசான் “ஓத்து” என்னும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.
நாளைத் தொடர்வோம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments