13/10/2023 (951)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
ஒழுக்கம் அனைவருக்கும் தேவை. ஒழுக்கம் அவரவர்கள் இருக்கும் நிலைக்குத் தக்கவாறு மாறுபடும். எந்த நிலையில் இருந்தாலும் அதற்கான அறக்கடமைகளை ஒழுகுவது ஒழுக்கம்.
ஒழுக்கமானது அடக்கம் இல்லாமல் அடைய இயலாது. எனவே, அடக்கமுடைமை அதிகாரத்தின் பின் ஒழுக்கமுடைமையை வைத்துள்ளார் நம் பேராசான்.
உடம்பில் இருந்து உயிர் பிரிந்தபின் பிணம் என்று பெயரிட்டு எரித்து மறந்தும்விடும் இந்த உலகம். ஆகையினால், இந்த உயிர் என்பது எவ்வளவு முக்கியம் என்று சொல்லித் தெரிவதில்லை. திருமூலப் பெருமான் திருமந்திரத்தில் இந்தக் கருத்தை மிக அழகாகச் சொல்கிறார்.
உயிர் போனப்பின் முதலில் ஊரை எல்லாம் கூப்பிடுவார்களாம். பின் கூடி சத்தம் போட்டு அழுவார்களாம். பின் நமக்கு வைத்திருந்தப் பெயரை நீக்கிவிட்டு பிணம் என்றப் பொதுப் பெயரைச் சூட்டிச் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று சுட்டு எரித்துவிட்டு பிணத்தைத் தொட்டதால் நீரில் முழுகித் தங்கள் உடல்களைச் சுத்தம் செய்து கொண்டு, பின் நம் நினைப்பையும் மறந்துவிடுவார்களாம்!
“ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம்என்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.” --- பாடல் 145; முதல் தந்திரம், திருமந்திரம்
ஆகையினால் இந்த உயிர் இருக்கும்வரைதான் சிறப்பு. ஆனால், இந்த உயிரைவிடச் சிறந்தது எது என்று கேட்டால் ஒழுக்கம் என்கிறார் நம் பேராசான்.
ஒழுக்கம் அனைத்துச் சிறப்புகளையும் அனைவர்க்கும் தருவதால் ஒழுக்கத்தை நாம் நம் உயிரைவிட மேலானதாகக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
“ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.” --- குறள் 131; அதிகாரம் – ஒழுக்கமுடைமை
விழுப்பம் = சிறப்பு, மேன்மை; ஒழுக்கம் விழுப்பம் தரலான் = ஒழுக்கமானது மேன்மையைத் தருதலால்; ஒழுக்கம்உயிரினும் ஓம்பப்படும் = அவ்வொழுக்கத்தை உயிரைவிடச் சிறந்ததாக போற்றி ஒழுக வேண்டும்.
ஒழுக்கமானது மேன்மையைத் தருதலால், அவ்வொழுக்கத்தை உயிரைவிடச் சிறந்ததாக போற்றி ஒழுக வேண்டும்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
எந்த நிலையில் இருந்தாலும் அதற்கான அறக்கடமைகளை ஒழுகுவது ஒழுக்கம். Can this be interpreted as one has to follow the dharma laid down for that person/position/profession etc.. without deviating with proper control of sense organs and egoless...like dharma/nature? of sugar cane is sweetness...and bitter gourd is bitterness