12/08/2022 (531)
“மதியாதார் முற்றம் மதித்தொருகால் சென்று
மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்;
கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்;
கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடை நாக்(கு)
கோடாமை கோடி பெறும்.” --- தனிப்பாடல் 42, ஔவையார்
மேலே கண்ட பாடலை நாம் முன்பொரு முறை சிந்தித்துள்ளோம். காண்க - 22/09/2021 (211).
ஔவை பெருமாட்டி நேர்முகமாகச் சொல்கிறார். வள்ளுவர் பெருமான் எதிர்மறையாக இடித்துரைக்கிறார்.
நம்மை மதிக்காதவர்கள், இகழ்பவர்கள் பின் சென்றுதான் வாழ வேண்டும் எனும் நிலை வந்தால் அது நாம் பயணிக்கும் குடிக்கு மானக் கேடு. அந் நிலைவருமாயின் அழிவதே மேலாம். – சொல்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
“ஓட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.” --- குறள் 967; அதிகாரம் – மானம்
ஒட்டுதல் = பொருந்துதல்; ஒட்டார் = மதியாதார், இகழ்வார்; அந்நிலையே = அப்பொழுதே.
அதாவது, தன் குடிக்கு தன்னால், தன் செயலால் மானக் கேடு வரும் எனும் நிலையை எவ்வாறாவது தவிர்க்க வேண்டும் என்பது நம் பேராசானின் கருத்து.
உயிரைக் கொடுத்தாவது காப்பாற்று என்கிறார். இருப்பது ஒரு உயிர்; அது போவது ஒரு முறை. அந்த உயிர், தன் குடியின் மானத்தைக் காக்கும் பொருட்டு இழப்பது மேல் என்கிறார்.
உயிர் என்பது உச்சபட்ச குறியீடு. உயிரை விடுதல் அல்ல இலக்கு. குடியின் மானம் காக்கப்பட வேண்டும் என்பதுதான் இலக்கு.
கோழைகளுக்கு வரலாற்றில் தனியான பக்கங்கள் ஒதுக்கப்படுவதில்லை!
அவ் உயிரே மருந்தாகலாம். தன் குடியின் மானம் காக்கலாம்!
விஞ்ஞானி ஒருவர் நாட்டைக் காட்டிக் கொடுத்ததாக குற்றம் சாட்டப்படுகிறார். ஊடகங்கள் பலவாறு அவரை இகழ்ந்து சித்தரிக்கின்றன. விஞ்ஞானிகள் குழுவிற்கே தலைகுனிவு என்று சித்தரிக்கப்படுகிறது.
ஆனால், அவர் மட்டில் அவர் குற்றமற்றவர் என்று தெரியும். அந்த சமயத்தில் அவர் தன் குடிக்கு மானக்கேடு வந்துவிட்டது என்று உயிரை விட்டிருந்தால்? அது எப்பொதுமே விஞ்ஞானிகள் குடிக்கு ஒரு கரும் புள்ளியாகவே இருந்திருக்கும்.
அதனால், அவர் தனக்கு நிகழ்ந்த சொல்லொணாத் துயரங்களையும், அவமானங்களையும் சகித்துக் கொண்டு, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சட்டப் போராட்டம் நிகழ்த்தி தான் குற்றமற்றவர் என்று நிருபித்து தன் குடிக்கு பெருமை சேர்த்து இருக்கிறார். யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்கு விளங்கியிருக்கும். விஞ்ஞானி பத்மபூஷன் நம்பி நாராயணன் அவர்கள்தான்.
தன் குடியின் மானத்திற்கு, பெருந்தகைமைக்கு தன்னால் ஒரு அழிவு வருமேயானால், அதை மீட்டு எடுக்க, அதற்கு ஒரு மருந்தாக தன் உயிர் இருக்குமானால் அதை எப்பாடு பட்டாவது காக்கவேண்டும்.
“மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடு அழியவந்த இடத்து.” --- குறள் 968; அதிகாரம் – மானம்
பெருந்தகைமை பீடு அழியவந்த இடத்து = குடியின் பெருமை அழியும் என்றால்; ஊன்ஓம்பும் வாழ்க்கை மற்று மருந்தோ? = உயிரைக் காப்பாறுவது மருந்தாகுமா?
மருந்தாகுமா? என்ற கேள்விக்கு பதில் ‘ஆம்’ என்றால் உயிரைப் பிடித்துக் கொண்டு மானத்தை நிலைநாட்டப் பார்க்க வேண்டும்.
இந்தக் குறளுக்கு பெரும்பாலான பெருமக்கள், உயிரை விடுவது மேல் எனும் பொருள்பட விளக்கம் கண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு சற்று நீண்டப் பதிவு. பொறுத்தருள்க.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comments