17/02/2024 (1078)
அன்பிற்கினியவர்களுக்கு:
அவன் இன்னும் பிரிந்து சென்றிடவில்லை! இல்லத்துள்தான் இருக்கிறான். காலையில் அவன் செய்த அந்த அதிகப்படியான செயல்கள் அவளை இப்படிப் புலம்ப வைத்துள்ளன. அவன் தன்மட்டில் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கிறான்!
அவள் மேலும் தன் தோழியிடம் கடிந்து சொல்கிறாள். இங்கே பார், நீ எனக்கு உதவுவது உண்மையெனில் அவரை எங்கும் போகவிடாமல் செய். அப்படி அவர் சென்றுவிட்டால் மீண்டும் அவர் என்னைச் சேர்வார் என்பதற்கு நான் எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது.
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு. - 1155; - பிரிவு ஆற்றாமை
ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் = என்னுயிரைக் காப்பவள் நீயாயின் என் உயிரைத் தன்னகத்தே கொண்டிருக்கும் அவரை என்னிடமிருந்து பிரியாமல் பாதுகாக்க வேண்டும்; மற்று அவர் நீங்கின் புணர்வு அரிது = அவ்வாறில்லாமல், அவர் பிரிவாராயின் என் உயிரும் நீங்கும். அவர் என்னை மீண்டும் சேர்வது என்பது நடக்காது.
என்னுயிரைக் காப்பவள் நீயாயின் என் உயிரைத் தன்னகத்தே கொண்டிருக்கும் அவரை என்னிடமிருந்து பிரியாமல் பாதுகாக்க வேண்டும். அவ்வாறில்லாமல், அவர் பிரிவாராயின் என் உயிரும் நீங்கும். அவர் என்னை மீண்டும் சேர்வது என்பது நடக்காது.
இவ்வாறு அவள் பயமுறுத்துகிறாள். என்ன நடக்கிறது என்பதை நாளைப் பார்ப்போம்.
மேலும் பேசுவோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Kommentare