top of page
Search

ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ... 357, 05/02/2024

05/02/2024 (1066)

அன்பிற்கினியவர்களுக்கு:

மெய்ப்பொருளைக் காணக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல் என்ற மூன்று படி நிலைகளில் கேட்டலைப் பாடல் 356 இல் சொன்னார்.

 

ஆன்மீக அறிஞர்கள், பிறவாமை என்றால் மீண்டும் பிறப்பு எடுக்காமல் இருப்பது என்கிறார்கள். இதற்கு என்ன அடிப்படை என்றால் வாழும்போதே ஒழுங்காக வாழ்ந்துவிட்டால் மீண்டும் நாயாக, நரியாகப் பிறப்பெடுத்து பரிகாரம் செய்யத் தேவையில்லை என்பதுதான்! இது நிற்க.

 

நம் பேராசான் நிலையாமையைச் சொல்லியுள்ளார்.

 

நிலையாமையை ஏன் சொன்னார் என்றால் பற்றுகளை விடுவதற்காக.

 

பற்றுகளை ஏன் விட வேண்டும் என்றால் விருப்பு வெறுப்பில்லாமல் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள.

 

விருப்பு வெறுப்பில்லாமல் ஏன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்?

வாழும்போதே அமைதியை அடைய, அமைதியாக இந்த உலகத்தைவிட்டு நீங்க என்றார்.

 

பிறப்பு என்றால் இறப்பு நிச்சயம். பிறக்காதது இறக்காது. அப்போது பிறவாமை என்றால் என்ன? பிறவாமை என்றால் நிலைத்த தன்மை.

 

சரி, எப்படி நிலைத்த தன்மையை அடைவது?

 

பிறந்திருக்கும் இப்பிறப்பிலேயே விதித்தன செய்து, விலக்கியன ஒழித்துச் செய்யும் ஒவ்வொரு செயலும் அறவழிக்கு மாற்றிக் கொண்டால் உங்கள் புகழ் உடம்பு என்றும் நிலைத்து இருக்கும். அஃதே பிறவாமை!

 

மறுபிறவியைக் குறித்து (On Reincarnation – Takashi Tsuji) டாகாஷி ஷுஜு என்னும் புத்த மத அறிஞர் மிக ஆழமான அதே சமயம் அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் ஒரு கட்டுரையை வரைந்துள்ளார்.

 

மிகச்சுருக்கமாக: மறுபிறவி என்பது ஒரு குறியீடு. மறுபிறவி இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் ஒரு கேள்வியே இல்லை. வாழும்போதே ஒழுங்காக வாழ்ந்துவிடுங்கள் என்கிறார்.

 

சரி, நாம் நம் பேராசான் சொல்லும் “நமக்குள்ளே எல்லாம்” என்னும் மெய்ப்பொருளைக் காணும் படிநிலையில் இரண்டாம் படிநிலையான சிந்தித்தலுக்கு வருவோம்.

 

ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்

பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. – 357; - மெய்யுணர்தல்

 

ஓர்த்து = தெளிய சிந்தித்து; பேர்த்து = மீண்டும்;

உள்ளம் ஒரு தலையா ஓர்த்து உள்ளது உணரின் = கற்ற கல்வி கேள்விகளைக் கொண்டு உள்ளுக்குள்ளேயே ஒரு முகப்படுத்தித் தெளிவாகச் சிந்தித்து மெய்ப் பொருளை உணரின்; பேர்த்துள்ள வேண்டா பிறப்பு = அவனுக்கு மீண்டும் பிறப்புகள் உள்ளதாக எண்ண வேண்டா.

 

கற்ற கல்வி கேள்விகளைக் கொண்டு உள்ளுக்குள்ளேயே ஒரு முகப்படுத்தித் தெளிவாகச் சிந்தித்து மெய்ப் பொருளை உணரின், அவனுக்கு மீண்டும் பிறப்புகள் உள்ளதாக எண்ண வேண்டா.

 

அஃதாவது, பிறப்புகள் இல்லா பிறாவாமையை அடையலாம்.

 

கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்கள் அறப்பாலுக்கு எழுதிய விருத்தியுரையில் இந்தக் குறளுக்கு அளித்த விளக்கம் கீழ்க் காணுமாறு:

 

“இக் குறளால் அகத்தின்னுள்ளே மெய்ப்பொருளைக் காணும் வழியைக் கூறினார். உள்ளத்தின்கண் உள்ளதாகிய மெய்ப் பொருளாவது, உளத்தாலும், பொறிகளாலும் உயிர் செய்வனவற்றையெல்லாம் சான்றாகக் கொண்டிருக்கும் அறிவு. ஈண்டும் மெய்ப்பொருளைக் கண்டார்க்குப் பிறப்பு இறப்புகள் இல்லை யென்பதை வற்புறுத்தினார்.”

 

அஃதாவது, உள்ளத்தின்கண் உள்ளாதாகிய அறிவை உணர்ந்தார்க்குப் பிறப்பு இல்லை என்கிறார் வ.உ.சிதம்பரனார் பெருமான்.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page