27/12/2022 (663)
சுற்றந்தழாலைத் (53ஆவது அதிகாரம்) தொடர்ந்து பொச்சாவாமை, 54 ஆவது அதிகாரம். இந்த அதிகாரத்தில் இருக்கும் பாடல்களையெல்லாம் நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.
“சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு” தான் பொச்சாப்பிற்கு definition (வரையறை) என்று குறள் 531ல் பார்த்துள்ளோம். காண்க 24/11/2021. அது இல்லாமல் இருப்பதுதான் பொச்சாவாமை.
மேலும், மிதப்புக்கு, நம்ம பேராசான் தேர்ந்தெடுத்தச் சொல்தான் ‘பொச்சாப்பு’. பொச்சாப்பு என்றால் நாமதான் வளர்ந்துட்டோமேன்னு செய்ய வேண்டியவைகளை மறந்துபோய்விடுவது. ‘பொச்சாவாமை’ என்றால் அப்படி இல்லாமல், கண்ணும் கருத்துமாக நம்ம கடமைகளை செய்து கொண்டு இருத்தல் என்றும் சிந்தித்துள்ளோம். பொச்சாவாமை என்றால் சோர்வின்றி இருப்பது. காண்க 12/11/2021.
சோர்வின்றி இருக்கும் தலைவன், தன்னைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் தவறுகள் இழைத்தார்கள் என்ற புகார் வந்தால் நேர்மை தவறாமல் நடவடிக்கை எடுப்பது செங்கோன்மை.
எனவே, பொச்சாவாமையைத் தொடர்ந்து செங்கோன்மை – 55ஆவது அதிகாரம்.
செங்கோன்மை என்றால் செவ்விய கோல் கொண்டு ஆளுதல். கோல் என்பது அளவுகோலுக்கு ஆகி வருகிறது.
குற்றமும், குணமும் நாடி ஆராய்தலால் கோல் என்றார். அது கோடாமையால், அதாவது, வளையாமல் இருப்பதால் அதை செங்கோல் என்று சொன்னார் என்பதை மணக்குடவப் பெருமான் நமக்கு எடுத்துக் கூறுகிறார்.
தப்புகள் செய்தோர், தவறுகளை இழைத்தோர் யாராக இருந்தாலும் நடு நிலைமையோடு பார்க்க வேண்டும். அவர்களுக்குச் சார்பாக, நம்மாளுதானே என்று இரக்கக் கண்ணோட்டத்துடன் ஒரு தலைவன் பார்க்கக் கூடாது.
கண்ணோட்டம் என்றாலே இரக்கம்தான்! இது எங்கே முக்கியம் என்பதைச் சொல்ல ஒரு அதிகாரமே வைத்துள்ளார் – 58 ஆவது அதிகாரம். அங்கே அதைப் பார்க்கலாம்.
இது நிற்க. நாம் செங்கோன்மையில் முதல் குறளுக்கு வருவோம்.
“ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்து செய்வஃதே முறை.” --- குறள் 541; அதிகாரம் – செங்கோன்மை
ஓர்ந்து = ஆராய்ந்து, கவனித்து, பார்த்து; அதாவது, தன்னுடன் இருப்பவர்கள் செய்யும் செயல்களை ஆராய்ந்து; யார்மாட்டும் கண்ணோடாது = யாரிடமும் பரிவு காட்டாமல்; இறை புரிந்து = அனைவருக்கும் நடு நிலையோடு இருந்து; தேர்ந்து செய்வது அஃதே முறை = சீர் தூக்கிச் செய்வதே ஒரு தலைமைக்கு நன்மை பயக்கும் முறையாகும்.
தன்னுடன் இருப்பவர்கள் செய்யும் செயல்களை ஆராய்ந்து, யாரிடமும் பரிவு காட்டாமல், அனைவருக்கும் நடு நிலையோடு இருந்து, சீர் தூக்கிச் செய்வதே ஒரு தலைமைக்கு நன்மை பயக்கும் முறையாகும்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Bình luận