08/08/2023 (886)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
கேம்பிரிட்ஜ் (Cambridge) என்ற நகரம் பல பல்கலைக் கழகங்களால் ஆன நகரம் என்றால் மிகையாகாது. நம்ம ஊரில் தடுக்கி விழுந்தால் தேநீர் கடை என்போமே, அதுபோல! கேம்பிரிட்ஜில் எந்த இடத்தில் காலை வைத்தாலும் கல்லூரிகளும் பல்கலைக் கழக வளாகங்களும்தான். கேம்பிரிட்ஜ் நகரம் இலண்டன் மாநகருக்கு சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
இங்கே டிரினிட்டி கல்லூரின்னு (Trinity College) ஒரு கல்லூரி இருக்கிறது. இந்தக் கல்லூரியில் “ஃப்ளவர் ஆஃப் கென்ட்” (Flower of Kent) என்ற ஒரு ஆப்பிள் மரத்தை மிகவும் பாதுகாப்பாக வளர்த்து வருகிறார்கள்.
இந்த மரம் லிங்கன்ஷையர் (Lincolnshire) என்ற நகரில் இருந்த ஒரு ஆப்பிள் மரத்தில் இருந்து எடுத்து வந்த கிளைகளின் மூலம் உருவாக்கப்பட்டது.
சரி, இதிலென்ன சிறப்பு என்கிறீர்களா?
நம்ம நியூட்டன் இருக்காரே நியூட்டன் (Sir Isaac Newton), ஆமாங்க அந்த ஆப்பிள் விழுவதைப் பார்த்து புவியீர்ப்பு விசை (Gravity) என்ற ஒன்று இருக்கிறது என்றும் அதைக் குறித்து மேலும் பல ஆராய்ச்சிகளைச் செய்தாரே அவரேதான்! அவருக்கு உதவிய ஆப்பிள் மரம்தான் நாம் மேலே கண்ட மரம். அதைத் தான் மிக பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள்.
எனக்கு ஒரு பெரும் சந்தேகம். எனக்குத் தலைமேலேயே அடித்துச் சொன்னாலும் உள்ளேயே இறங்க மாட்டேங்குதே அவருக்கு மட்டும் எப்படி என்று நினைத்து அங்கே போய் ஒரு தரம் இல்லை இரண்டு தரம் போய் பார்த்துட்டு வந்தேன். ஆனாலும் ஒன்னும் நடக்கலை!
இந்த டிரினிட்டி கல்லூரி இருக்கே அது என் நெஞ்சுக்கு நெருக்கமான புனிதத் தலங்களுள் ஒன்று. அங்கேதான் என் அறிவாசான் பெர்ட்ரன்ட் ரஸ்ஸல் (Bertrand Russel) இருந்தார். மேலும் நம் கணித மேதை இராமானுஜத்தைப் போற்றிய கல்லூரியும் அதுதான். இன்னும் நிறைய இருக்கு. அவை இருக்கட்டும். நான் சொல்ல வந்தக் கதையே வேறு.
கேம்பிரிட்ஜில் கல்லூரிகள் மட்டுமா இருக்கின்றன மகிழ்வில்லங்களும்கூட (Pubs and Bars) இருக்கின்றன. அதில், ஈகிள் பப் (Eagle Pub) என்ற ஒரு மகிழ்வில்லத்தில் ஒரு நாள் (பிப்ரவரி 28, 1953) இரண்டு பேர் வந்து நாங்க “வாழ்க்கையின் இரகசியத்தை”க் கண்டுபிடிச்சுட்டோம் என்று அங்கிருந்தவங்களுக்குச் சொன்னாங்க!
இது என்ன பிரமாதம், நம்ம ஊர் மகிழ்வில்லங்களில் என்ன என்னமோ கண்டுபிடிக்கறாங்களே என்கிறீர்களா? அதைக் குறித்துப் பேசினால் முக்கியமானச் செய்திகளை விட்டுவிடுவோம். நாம் ஈகிள் பப்பிற்கே போவோம். அங்கே வருபவர்கள் பெரும்பாலும் அறிஞர்களும் விஞ்ஞானிகளும்தானாம். இது நிற்க.
அந்த இரண்டுபேர் யார் என்றால் அவர்கள்தாம் பிரான்சிஸ் க்ரிக் (Francis Crick) மற்றும் ஜேம்ஸ் வாட்சன் (James Watson). அவர்கள் கண்டுபிடித்ததாகச் சொன்னது இனக்கீற்று அமிலம். அதாங்க DNA (Deoxyribonucleic acid). மரபணு ஆராய்ச்சியெல்லாம் செய்து தலைமுறைகளைக் கண்டுபிடிக்கிறார்களே அந்தச் செய்தியைத்தான், அந்த ஈகிள் பப்பில் வந்து ரொம்பச் சாதாரணமாக எல்லாருக்கும் தெரியப்படுத்தினாங்க. இவர்கள் இருவருக்கும் 1962 இல் நோபல் பரிசும் கொடுத்தாங்க!
சரி, நீ அந்த மகிழ்வில்லத்திற்குப் போனாயா என்கிறீர்களா? சும்மா தூரத்தில் இருந்து பார்த்தேன் என்றால் நம்பவாப் போகிறீர்கள்? இது இருக்கட்டும், நாம் இதைவிட முக்கியமான ஒரு கேள்வியோடு நேற்று நிறுத்தியிருந்தோம்.
நம்மாளு: ஆங்... அது என்ன கேள்வி? கதை கதையாகச் சொன்னால் எதை நினைவில் வைப்பது?
அதுவும் சரி. அதுதாங்க, ஏன் எப்போதும் ஏழு தலைமுறை என்கிறோம்? அதில் என்ன சிறப்பு? என்ற கேள்விதான்.
இந்த மரபணு ஆராய்ச்சியில் (DNA) என்ன சொல்கிறார்கள் என்றால் நமது மரபணுவில் ஏழுதலைமுறையின் பதிவுகள் ஓரளவிற்குத் தெளிவாக இருக்கும் வாய்ப்புகள் இருக்காம். அதற்கு மேலே போகும்போது நமது முன்னோர்களின் மரபணுக்களின் தாக்கம் அவ்வளவாக இருக்காதாம்! இதுதாங்கச் செய்தி. இதைக் கணக்கிட ஒரு சின்ன கணக்குத் தொடர் (Mathematical series) இருக்காம். இது நிற்க.
இந்த ‘ஏழு’ என்ற எண்ணை எப்படி அந்தக் காலத்தில் கண்டு பிடித்தார்கள், அதை எப்படி ஏழு தலைமுறைக்கு குறித்தார்கள் என்பதுதான் எனக்கு ஒரு சந்தேகமாகவே (டவுட்டு - Doubt) இருக்கு.
இன்னுமொரு செய்தி என்னவென்றால், இந்த உலகில் எந்த இருவரை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் இருவரின் மரபணு (DNA) 99.6% ஒன்றாகத்தான் இருக்குமாம். அதனால்தான் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” போல இருக்கு. அந்த மீதி 0.4% இருக்கே அங்கேதான் வித்தியாசம்!
நாம் நேற்று மீள்பார்வையாகப் பார்த்தக் குறளை மீண்டும் ஒரு முறை:
“ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு.” --- குறள் – 835; அதிகாரம் – பேதைமை
வரப்போகும் ஏழு தலைமுறையையும் துன்பத்தில் வீழ்த்தி அழுந்தும் நிலையை தன் ஒரு செயலிலே செய்யும் ஆற்றல் படைத்தவர்தான் பேதை.
சிரிச்சுக்கிட்டே இருங்க; சந்தோஷமாக இருங்க.
இரண்டொரு நாளுக்கு முன் என் ஆசிரியர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் என் காதைத் திருகினார். கருத்தெல்லாம் சரி, அந்தப் பேச்சு நடைதான் மிகவும் கொச்சையாக இருக்கிறது. ஏன் தமிழை சுத்தமாக எழுதமாட்டீர்களா என்று கேட்டார். என்ன செய்ய? வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறேன்!
பாருங்க, சினாவுக்கு சனா வந்தால் சந்தம் சரியாக (rhyming) இருக்குமே என்று “சிரிச்சுக்கிட்டே இருங்க; சந்தோஷமாக இருங்க” என்று எழுதிட்டேன். அவர் பார்த்தால் ஏன் மகிழ்ச்சியா இருங்கன்னு அழகாகத் தமிழில் சொல்லக்கூடாதா என்பார்.
சரி, அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கக்கடவீர்களாக!
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
பி.கு: சிலர் விஷயத்தை விடயம்ன்னு சொன்னால்தான் நல்ல தமிழ் என்கிறார்கள். அப்போது, சந்தோஷத்தை சந்தோடம்ன்னு சொல்வாங்களா என்பதும் எனது ஐயம் (டவுட்).
Comentários