top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

கொக்குஒக்க ... 490, 471, 489

18/11/2022 (624)

ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்றால் வினைவலி, தன் வலி, மாற்றான் வலி, துணை வலி எல்லாவற்றையும் ஆராய்ந்து செய்ய வேண்டும் என்றார் நம் பேராசான். காண்க 01/11/2022 (608).


வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்.” --- குறள் 471; அதிகாரம் – வலியறிதல்


துணைவலி கொஞ்சம் இப்படி அப்படி இருக்கு. இப்படி வைத்துக் கொள்வோம், அது நம்ம அருகில் இல்லை. ஆனால், எய்தற்கு அரிய வாய்ப்பு வந்து விட்டது. என்ன செய்யனும்? நாமே, அதை முடித்துவிடலாம் என்றால் அந்தச் செயலை எதற்காகவும் நாம் செய்யாமல் விட்டுவிடக்கூடாது.


இதை:


எய்தற்கு அரிய இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற்கு அரிய செயல்.” --- குறள் 489; அதிகாரம் – காலமறிதல்


பகையை வெல்லக் காத்திருக்கும் தலைவனுக்கு அந்தக் காலம் தானாக வந்து அமையுமானால், அது மிகவும் அரிது அல்லவா? ஆதலினால், அது கழிவதற்கு முன்பே, முடித்துவிட வேண்டும். காண்க 17/11/2022 (623).


நம்மாளு: ஐயா, துணை வலியே இல்லை அப்போது என்ன செய்வது?


ஆசிரியர்: எப்பவுமே காலம்தான் துணை. ஒரு காயம் ஆற வேண்டுமானாலும் சரி, ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்றாலும் சரி காலத்தின் பங்கு பெரும் பங்காகும். Time is the best tranquilizer என்பார்கள் ஆங்கிலத்தில். அதாவது, காலம் அனைத்தையும் அமைதிப்படுத்தும். காலம் கனிய கனியத் துணையும் கைகூடலாம்.


ஆனால், அது வரை நம் தலை தண்ணிரின் மேல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அதாவது, நமக்கு சேதாரம் இல்லாமல் வைத்துக் கொள்ளவேண்டும்.


அதுமட்டும் போதுமா என்றால் போதாது. எப்போதும் நம் பார்வை, நம் காலடியிலேயெ இருக்க வேண்டும். வாய்ப்புகள் காலடியிலிருந்து நழுவக் கூடாது!


நம்மாளு: சரி ஐயா. இப்போ என்ன சொல்றீங்க?


ஆசிரியர்: நாம் அடுத்தக் குறளைப் பார்க்கலாம்.


கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்

குத்துஒக்க சீர்த்த இடத்து.” --- குறள் 490; அதிகாரம் – காலமறிதல்


கூம்பும் பருவத்து கொக்கு ஒக்க = ஒடுங்கி இருக்கும் போது எப்படி கொக்கானது ஒற்றைக் காலில் நின்று கொண்டு சலனமில்லாமல் இருக்கிறதோ அவ்வாறு இருக்க வேண்டும்; மற்றுச் சீர்த்த இடத்து அதன் குத்து ஒக்க =சரியான இரை வரும் காலத்தில், அதே கொக்கு விரைந்து குத்தி அதன் இரையை எடுக்குமோ அதைப்போல இருக்கனுமாம்.


‘மற்று’ வினை மாற்றின்கண் வந்தது. அதாவது சடக்குன்னு மாற்றனும். (Plateஐ திருப்பி போடனும் என்கிறார்களே அப்படி)


ஒடுங்கி இருப்பது என்றால் சும்மா இருப்பது அல்ல. அதைத்தான் , “உள் வேர்க்கனும்” என்றார் குறள் 487ல். அந்தக் கனலைத் தணிய விடாமல் மனதுக்குள்ளேயே மூட்டிக் கொண்டு இருக்க வேண்டும்.


அதாவது, நமது மனதில், அந்தச் செயலைப் பயிற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.


மைக்கேல் ஜோர்டன் (Michael Jordan) என்று ஒரு கூடைப் பந்து (Basket Ball) வீரர் இருக்கார். அவர் விளையாடாமல் இருக்கும் போது எல்லாம் மனதளவிலே விளையாடுவது போல் பயிற்சி செய்து கொண்டு இருப்பாராம்! பின் அதை அவரின் குழுவுக்கும் சொல்லிக் கொடுத்து வெற்றி மேல் வெற்றியைக் குவித்தது அந்தக் குழு.


ஆக, அப்பவே முடிக்க வேண்டியதை அப்பவே முடிக்கனும். தள்ளிப் போட வேண்டியதை தள்ளிப் போடனும். தள்ளிப் போட்டாலும் உள்ளுக்குள்ளே அதை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்!


நன்றி. மீண்டும் சந்திப்போம்.


உங்கள் அன்பு மதிவாணன்.






Comments


Post: Blog2_Post
bottom of page