22/06/2024 (1204)
அன்பிற்கினியவர்களுக்கு:
அவனின் நேரத்தை நொந்து கொள்கிறான். சரி, ஏதாவது கோவிலுக்குச் செல்லலாம் என்று செல்கிறான். ஆங்கே அவனுக்குப் பூவினைக் கொடுக்கிறார்கள், ஆண்டவனின் அருட்பிரசாதமாக! அவன் அதனை வாங்கி தன் காதுகளில் சொருகிக் கொள்கிறான்.
வீட்டிற்குச் செல்கிறான். அவளோ வாசலிலேயே நின்று கொண்டுள்ளாள். அவன் ஒரு சட்டையைப் போட்டுக் கொண்டு அதன் மேல் ஒரு பெரிய போர்வையியும் போர்த்திக் கொண்டு ஏதோ சுரம் பிடித்தவன் போல் வந்து கொண்டிருக்கிறான். அவனின் காதினில் ஒரு காட்டுப் பூ!
அவளுக்குச் சிரிப்புக் கொப்பளிக்கிறது. அந்த பயம் இருக்கட்டும் என்று நினைத்துக் கொள்கிறாள்.
இன்னும் கொஞ்சம் இழுத்தடிப்போம் என்று நினைத்து, என்ன காதிலே பூ? எவளுக்கோ அந்தக் குறிப் “பூ”? என்கிறாள்.
அவன் புலம்புகிறான். ஐயனின் கற்பனையில் இதோ:
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று. – 1313; - புலவி நுணுக்கம்
கோட்டுப் பூச் சூடினும் = ஏதோ பூ கிடைத்தது என்று காதில் சொருகிக் கொண்டேன்; ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று காயும் =
அந்தப் பூவின் மூலம் வேறு எவளுக்கு உன்னுடன் வர “நான் தயார்” என்னும் உங்களின் உள்ளக் கிடக்கையைத் தெரியப்படுத்துகிறீர் என்று கடிகிறாள்.
ஏதோ பூ கிடைத்தது என்று காதில் சொருகிக் கொண்டேன். அந்தப் பூவின் மூலம் வேறு எவளுக்கு உன்னுடன் வர “நான் தயார்” என்னும் உங்களின் உள்ளக் கிடக்கையைத் தெரியப்படுத்துகிறீர் என்று கடிகிறாள்.
கோடு என்றால் வளைந்த என்று ஒரு பொருள் இருக்கிறது என்று நமக்குத் தெரியும். காண்க 30/08/2022.
“பாடு” எப்படி பாட்டாக மாறுகிறதோ கோடும் கோட்டாக மாறும். கோட்டுப் பூ என்றால் வளைந்த பூ என்ற பொருள் எடுக்கலாமா என்றால் பொறுத்தமானதாக இல்லை. வாடிய பூ என்றால் பொறுத்தமானதாக இருக்கும். அவன் அணிந்ததோ அப்பொழுது அலர்ந்த பூவும் அன்று. அஃது, வாடிய பூ. அதற்கே அவள் அவனைப் பாடாய் படுத்துகிறாள்.
கோட்டுப் பூ என்பதற்கு அறிஞர் பெருமக்கள் மரக்கிளைகளில் உள்ள பூ, ஒப்பனைப் பூ, வளைந்த மலர் மாலை என்றெல்லாம் பொருள் சொல்கிறார்கள்.
மேற்கண்ட பாடலுக்குத் தொல்காப்பியிப் புலவர் வெற்றியழகனாரின் உரை முற்றிலும் வேறு கோணமாக உள்ளது.
புலவர் வெற்றியழகனார்: எவரிடமிருந்தும் பெறாமல் கிளையில் பூத்த மலரைக் கொண்டு வந்து அவளுக்குச் சூட்டினேன். அப்பொழுதும் சினந்தாள். யாரோ ஒருத்திக்குச் சூட்டுவதற்காக இங்கே ஒத்திகை பார்க்கிறீர் என்று.
நாம் அடுத்த பாடலுக்குச் செல்வோம்.
அவன் அவளைச் சமாதானம் செய்ய முயல்கிறான். சமரசம் செய்யும் போதும் சொல்களில் கவனம் இருக்க வேண்டும். சொல்களை மாற்றிப் போட்டால் மீண்டும் சண்டைதான்.
அவன்: “மற்றவர்களைவிட உன்னைத்தான் மிகவும் அதிகமாகக் காதலிக்கிறேன்” என்றான்.
அவள்: “யாரையெல்லாம் என்னைவிட குறைவாக காதலிக்கிறீர்கள்?” என்றாள்!
அவன் சொல்லியிருக்க வேண்டியது: உன்னை மட்டும்தான் காதலிக்கிறேன் என்பதனை! மீண்டும் ஊடல்.
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று. – 1314; - புலவி நுணுக்கம்
யாரினும் காதலம் என்றேனா = எல்லாரையும்விட உன்னைத்தான் அதிகமாகக் காதலிக்கிறேன் என்றேனோ; யாரினும் யாரினும் என்று = அப்பொழுது, யார் யாரையெல்லாம் கொஞ்சமாகக் காதலிக்கிறீர்கள் என்று; ஊடினாள் = மீண்டும் ஊடினாள்.
எல்லாரையும்விட உன்னைத்தான் அதிகமாகக் காதலிக்கிறேன் என்றேனோ, அப்பொழுது, யார் யாரையெல்லாம் கொஞ்சமாகக் காதலிக்கிறீர்கள் என்று மீண்டும் ஊடினாள்.
அவன் பாடு ஐயோ பாவம்தான் எப்பொழுதும்!
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments