08/03/2022 (375)
“முட்டின்று ஒருவர் உடைய பொழுதின்கண்
அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே
கட்டலர்தார் மார்ப! கலியூழிக் காலத்துக்
கெட்டார்க்கு நட்டாரோ இல்.” --- பழமொழி நானூறு
தங்கு தடையின்றி நம்மிடையே செல்வம் இருக்கும் போது, நாம் சமைத்த உணவை பகிர்ந்து கொள்ள ஆயிரம் பேர் வருவார்கள். சற்று தட்டுப்பாடு வருமேயானால் அவர்களைக் காண முடியாது.
“கெட்டார்க்கு நட்டார் இல்” இதுதான் பழமொழி.
அட்டிற்று = சமைத்த உணவு.
இந்தாங்க எடுத்துட்டு போய் சமைத்துக்கோங்க என்று சொன்னாலும், அதற்கும் சோம்பேறித்தனம் பட்டு சமைத்த உணவையே உரிமையோடு எடுத்துக் கொண்டு போவார்களாம்!
“கட்டலர் தார் மார்பா” என்றால் மலர்களை நன்றாக கட்டிய மாலை அணிந்தவனே என்று பொருள். (மாலைகளில் பல விதம் இருக்காம். அதில் ஒன்றுதான் ‘கட்டு’.)
ஆண்கள் அணிந்தால் அது “தார்”. பெண்கள் அணிந்தால் அது “மாலை”. இப்படி தனித்தனியாக சொற்களை வைத்துள்ளார்கள்.
சரி, இப்போ ஏன் இந்தப் பழமொழி? இருக்கே, காரணம் இருக்கே! வள்ளுவப் பெருந்தகை இந்தப் பழமொழியை பயன் படுத்துகிறார். துன்பம் நேர்கையில் நம் நெஞ்சம் தான் துணை என்றவர், அது கூட துணையாகாமல் போகிறதாம்!
“கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.” --- குறள் 1293; அதிகாரம் – நெஞ்சொடு புலத்தல்
கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ = “கெட்டார்க்கு நட்டார் இல்” என்ற பழமொழி போல; நெஞ்சே நீ பெட்டாங்கு அவர்பின் செலல் = என் நெஞ்சே நீ என்னைவிட்டு அவர் பின் செல்கிறாய்.
பெட்டாங்கு = விரும்பி; பெட் = விருப்பம்
பார்த்தீங்களா ‘PET’ என்ற சொல் எப்படி வந்திருக்கும் என்பதை!
என் ‘பெட்’ இது என்றால், அது சுத்தத் தமிழ்தான். சொற்களை மீட்டு எடுக்கனும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments