top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

கேட்டார்ப் பிணிக்கும் கல்லார்ப் பிணிக்கும் ... 643, 570

28/01/2023 (695)

பிணி என்றால் எப்போதும் இருக்கும் நோய் என்று நமக்குத் தெரியும். பசிப்பிணி ஒர் உதாரணம்.


பிணை என்றால் எப்போதும் சேர்ந்து இருப்பது, ஆர்க்கும், சேர், பெண் மான் இப்படி பல பொருள்கள் இருக்கு.


பிணிக்கும் என்றால் எப்போதும் சேர்ந்து இருக்க வைக்கும், இணைக்கும் என்று பொருள்.


பிணி, பிணை, பிணிக்கும் என்ற சொற்கள் ‘எப்போதும்’ என்ற வகையிலே பயன்படும்.


சொல்லும் சொல் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இலக்கணம் சொல்கிறார் நம் பேராசான்.


அதாவது நாம் சொல்லும் சொற்களைக் கேட்டவர்கள் நம்மோடு எப்போதும் இணைந்து இருக்கும் வகையிலே அந்தச் சொற்கள் இருக்கனுமாம். அது மட்டுமல்ல ‘கேட்க மாட்டேன்’ என்று இருப்பவர்களும் நாம் சொன்ன சொற்களை அறிந்தபின் “அடடா, நாமும் அவர் சொன்னதைக் கேட்டு இருக்கலாமோ”ன்னு விரும்பும் வகையிலே இருக்கனுமாம்.


கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்.” --- குறள் 643; அதிகாரம் – சொல்வன்மை


வேட்ப = விரும்ப; பிணிக்கும் தகையவாய்= எப்போதும் நம்முடன் இணைந்து இருக்கும் வகையில்;


(சொல்) கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் = நாம் சொல்லும் சொல்லானது, கேட்பவர்களை, நம்முடன் இருப்பவர்களை நம்முடனே எப்போதும் விரும்பி இருக்கும் வகையிலே இருக்கவேண்டும்;

கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் = நம்முடன் மாற்று கருத்து கொண்டோரும், மாறுபட்டு இருப்போரும்கூட, ‘அடடா, அவர் சொல்வதில் நியாயம் இருக்கத்தானே இருக்கு’ என்று நாம் சொல்வதை விரும்பும் வகையில் இருக்கனுமாம்.


‘பிணிக்கும்’ என்ற சொல்லைத் திருக்குறளில் இரண்டு இடத்தில் நம் பேராசான் பயன்படுத்தியுள்ளார். இன்னொரு இடம், நாம் பார்த்துக் கொண்டு இருக்கும் ‘வெருவந்த செய்யாமை’ அதிகாரத்தின் முடிவுரையானப் பாடல்.


கடுங்கோல் என்ன செய்யும் என்று சொல்கிறார். இனம் இனத்தோடு சேரும் என்பதைப்போல, கடுங்கோலர்களுடன் கல்லாதவர்கள்தான் எப்போதும் இருப்பார்களாம். இது இரண்டும்தான் நல்ல ‘பிணை’ (combination) என்கிறார்.


“உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டாய்” என்பது போல!


இதுங்க இரண்டுமே பூமிப் பந்திற்கு பாரம்தான் என்கிறார்.


கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது

இல்லை நிலக்குப் பொறை” ---- குறள் 570; அதிகாரம் – வெருவந்த செய்யாமை


கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் = கல்லாதவன், அறிவில்லாதவனோடு கடுங்கோல் எப்போதும் ஒட்டிக் கொள்ளும்;

கடுங்கோல் பிணிக்கும் கல்லார் = கடுங்கோலனுடன் எப்போதும் ஒட்டிக்கொள்வார்கள் அறிவற்றவர்கள்;

அதுவல்லது = அதைவிட; நிலக்குப் பொறை இல்லை = இந்தப் பூமிக்கு தேவையற்ற பாரம் இல்லை.


கல்லாதவன், அறிவில்லாதவனோடு கடுங்கோல் எப்போதும் ஒட்டிக் கொள்ளும்;

கடுங்கோலனுடன் எப்போதும் ஒட்டிக்கொள்வார்கள் அறிவற்றவர்கள்;

அதைவிட இந்தப் பூமிக்கு தேவையற்ற பாரம் இல்லை. அதாவது கடுங்கோலன், கல்லான் இரண்டுமே பூமிக்குப் பாரம் (waste piece). இரண்டும் இணைந்தால் அது கொஞ்சம் அதிக பாரம்தான் (over weight)!


வெருவந்த செய்பவர்கள் உலகிற்கு பாரம் என்று ஓங்கி ஒரு அடி அடித்துவிட்டு நகர்கிறார் எம்பிரான்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)




Kommentare


Post: Blog2_Post
bottom of page