21/12/2022 (657)
சுற்றந்தழால் என்றால் சுற்றத்தை அரவணைத்துச் செல்லுதல் என்பது நமக்குத் தெரியும். அதை எப்படிச் செய்வது என்பதைச் சொல்கிறார் குறள் 525ல்.
உள்ளதைக் கொடுங்கள்; உள்ளம் மலர இன்சொல் பேசுங்கள்; உள்ளத்தைத் தொடுவீர்கள்; உங்களைச் சுற்றம் சுற்றும். இவ்வளவுதான் என்கிறார்.
“கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.” --- குறள் 525; அதிகாரம் – சுற்றந்தழால்
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் = ஒருவன் சுற்றத்திற்கு தேவையானவைகளைக் கொடுத்தலும், இன்சொல் பேசுதலையும் கடைபிடித்தால்; அடுக்கிய சுற்றத்தால்= தம்மின் வயதில் மூத்தோர்களும், தம்மை ஒத்தவர்களும், தம்மின் இளையவர்களுமாக அடுக்கி வரும் சுற்றத்தால்; சுற்றப்படும் = அணைக்கப்படுவீர்கள்
ஒருவன் சுற்றத்திற்கு தேவையானவைகளைக் கொடுத்தலும், இன்சொல் பேசுதலையும் கடைபிடித்தால்; தம்மின் வயதில் மூத்தோர்களும், தம்மை ஒத்தவர்களும், தம்மின் இளையவர்களுமாக அடுக்கி வரும் சுற்றத்தால்; அணைக்கப்படுவீர்கள்.
இந்தச் செயல் செய்யும்போது தலைக்கணம் இருக்கலாமா என்றால் அதற்கு
இனியவைக்கூறல் (100ஆவது) அதிகாரத்தில் இருந்து ஒரு குறளை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். மீள்பார்வைக்காக காண்க 02/08/2022.
“பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.” --- குறள் 95; அதிகாரம் – இனியவைகூறல்
எங்கெல்லாம் பணிவுடன் இருக்க வேண்டுமோ அங்கெல்லாம் பணிவுடன் இருப்பவனும், இன்சொல் பேசுபவனுமாக ஒருத்தன் இருந்தால் அதுவே அவனுக்கு அழகு. வேறு எந்த வெளி வேடமோ, மேல் பூச்சோ அவனுக்குத் தேவை இல்லை.
அறத்துப்பாலை சொல்லி முடித்துவிட்டு பொருட்பாலைத் தொடங்குகிறார். முதல் அதிகாரம் “இறைமாட்சி”. அதாவது, தலைமைகளின் பண்புகளைச் சொல்கிறார்.
அதில் ஏழாவது குறளில் உலகத்தையே உன் சொல்லால் கட்டிப்போட வேண்டுமா? என்ற கேள்விக்கு பதில் தருகிறார்.
அதே பதில்தான் ஈதல், இன்சொல். இந்த இரண்டும்தான் என்று அங்கேயே அடித்தளம் அமைத்துவிட்டார்.
“இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான் கண்டனைத்திவ் வுலகு.” --- குறள் 387; அதிகாரம் – இறைமாட்சி
இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு = இனிய சொல்லுடன் ஈதலைச் செய்து நல்லதொரு வாழ்வினைத் தன் குடிகளுக்கு அளிக்க வல்ல தலைமைக்கு;
தன்சொலால் இவ் உலகு தான் கண்டனைத்து = தன் சொல்லால் இந்த உலகம் தான் கண்டாற் போல தன் வசப்படும்.
மேலும் பல இடங்களிம் இன் சொல்லைப் பற்றிய குறிப்புகளைத் தருகிறார்.
‘இன்சொல்’ என்பதற்கு பரிமேலழகப் பெருமான் என்ன சொல்கிறார் என்றால் கேள்வியினும், வினையினும் இனியவாய சொல் என்கிறார். அதாவது, கேட்பதற்கு மட்டும் உதட்டளவில் சொல்வதல்ல இன் சொல். செயலிலும் இருக்க வெண்டும்!
“வார்த்தை மாமிசம் ஆக வேண்டும்” இப்போது!
அதாவது, இன்சொல் தான் நாம் என்றாக வேண்டும்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments