30/12/2022 (666)
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது, தற்போது இந்த உலகம் ESG என்பதை வலியுறுத்துகிறது. அதாவது அனைவரின் சொல்லும் செயலும், சுற்றுப்புற சூழலைப் பாதுகாப்பது, சமுதாயத்தை முன்னிறுத்துவது, நல்ல நிர்வாகத்தைக் கடைபிடிப்பது என்பதில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
இந்த செங்கோன்மை அதிகாரத்தில் அந்த மூன்றை G, S, E என்ற வரிசையில் நம் பேராசான் அடுக்கியுள்ளார்.
Governance அதாவது செங்கோன்மை முக்கியம் என்பதைக் குறள் 543ல் தெரிவித்தார்.
குறள் 544ல் செங்கோன்மை என்றால் சமுதாயத்தை முன்னிறுத்துவது என்கிறார்.
குடிகளை அரவணைத்து அவர்களிடம் இன்சொல் பேசுதலும், அவர்கள் தளர்ந்த போது அவர்களுக்கு வேண்டுவன செய்தலும் ஒரு தலைமை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் அந்த தலைமையின் கீழ் அவனின் குடிகள் மட்டுமல்ல இந்த உலகமே அந்தத் தலைமையின் கீழ் நிற்கும் என்கிறார். அதாவது “Social” ஐ வலியுறுத்துகிறார்.
“குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.” --- குறள் 544; அதிகாரம் – செங்கோன்மை
குடிதழீஇக் = குடிகளை அரவணைத்து; கோலோச்சும் மாநில மன்னன் = நீதி வழுவாது ஆளும் தலைமையின்;
அடிதழீஇ நிற்கும் உலகு = அடிகளைத் தழுவி இந்த உலகமே செல்லும்.
குடிகளை அரவணைத்து, நீதி வழுவாது ஆளும் தலைமையின் அடிகளைத் தழுவி இந்த உலகமே செல்லும்.
தலைமை என்றால் அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.
அடுத்துவரும் குறளில் சூழலைச் சொல்கிறார். அதை நாளை பார்க்கலாம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comentários