top of page
Search

கேட்பினுங் கேளாத் தகையவே ... 418, 95, 419, 420, 30/04/2024

30/04/2024 (1151)

அன்பிற்கினியவர்களுக்கு:

சிலருக்குக் காது இருக்கும் ஆனால் நல்லவைகளைக் கேட்காது;

கண் இருக்கும் நல்லவைகளைப் பார்க்காது;

வாய் இருக்கும் நல்லவைகளைப் பேசாது …

 

நம் மகாத்மா மூன்று குரங்கு சிலைகளை எதற்கு உவமையாகச் சொன்னார் என்பதனை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு மகாத்மாவே சொன்னார் “அதோ பார் அந்தக் குரங்கு சிலைகளை!  

எதனையுமே கேட்காதே, பார்க்காதே, சொல்லாதே” என்று முடிவெடுத்துவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. இது நிற்க.

 

கண் என்று இருந்தால் அதில் கண்ணோட்டம், அஃதாவது, இரக்கம் இருக்கணும் என்றார் கண்ணோட்டம் என்னும் அதிகாரத்தில்.

 

வாய் என்று இருந்தால் அது இனியவை கூறல் வேண்டும்; புறங்கூறாமை, பயனில சொல்லாமை வேண்டும்; வாய்மையில் நிலைக்க வேண்டும் என்று சில அதிகாரங்களைப் படைத்தார்.

 

காது என்று இருந்தால் அது நல்ல அறிஞர்களின் கருத்துகளை நாளும் கேட்க வேண்டும் என்று கேள்வி அதிகாரத்தினை வைத்தார்.

 

நல்ல கருத்துகளால் துளைக்கப்படாத செவி இருப்பதும் ஒன்றுதான்; இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான்.

 

காதுகளின் மூலம் கேட்டால் மட்டும் போதுமா? இல்லை.

அது நம் மனத்தைத் துளைத்து அறிவு கொள் முதலாக மாறவேண்டும். அதுதான் கேள்வியின் இலக்கணம் என்கிறார்.

 

துப்பாக்கித் தோட்டா என்று கேள்விப்பட்டிருக்கிறோம். தோட்டா என்றால் துப்பாக்கியில் இருந்து வெளிப்படும் “துளைக்கும் குண்டு”. தோட்டா என்றால் துளைக்கணும்!

 

அதே போன்று அறிஞர் பெருமக்கள் நல்ல கருத்துகளைச் சொல்லும் பொழுது, அந்த அறிவு குண்டுகள் நம் காதைத் துளைத்து நம் மனத்திற்குள் செல்லும் விதமாகத் திறந்து வைக்க வேண்டும்.

 

தோட்கப்படுதல் என்றால் துளைக்கப்படுதல் என்று பொருள்.

 

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி. – 418; - கேள்வி

 

கேள்வியால் தோட்கப்படாத செவி = அறிஞர் பெருமக்களின் அறிவு குண்டுகள் நம் காதைத் துளைத்து நம் மனத்திற்குள் செல்லும் விதமாகத் திறந்து வைக்கப்படாத காது; கேட்பினுங் கேளாத் தகையவே = கேட்டுக் கொண்டிருப்பதனைப் போல கேட்டுக் கொண்டிருந்தாலும் உண்மையில் அது கேளாத காதுக்கு ஒப்பாகும். அதனால் எந்தப் பயனும் இல்லை.

 

அறிஞர் பெருமக்களின் அறிவு குண்டுகள் நம் காதைத் துளைத்து நம் மனத்திற்குள் செல்லும் விதமாகத் திறந்து வைக்கப்படாத காது, கேட்டுக் கொண்டிருப்பதனைப் போல கேட்டுக் கொண்டிருந்தாலும் உண்மையில் அது கேளாத காதுக்கு ஒப்பாகும். அதனால் எந்தப் பயனும் இல்லை.

 

உயர வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் செய்ய வேண்டியன இரண்டு. 1) ஒருவர்க்கு எங்கெல்லாம் பணிவுடன் செயல்பட வேண்டுமோ அங்கெல்லாம் பணிவுடன் செயல்பட வேண்டும்; 2) எல்லாரிடத்திலும் இனிய சொல்களைப் பேசுதள் வேண்டும். அவைதாம் அழகு என்றார். காண்க 02/08/2022. மீள்பார்வைக்காக:


பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற. - 95; - இனியவைகூறல்

 

சரி, இந்த இரு பண்புகளையும் ஒருவர் அடைவது எப்படி?

 

அதற்கு என்ன சொல்கிறார் என்றால் “காதைத் தீட்டு” என்கிறார். 

 

வணங்கிய வாய் வேண்டுமா, நுட்பமான அறக் கருத்துகளை அறிஞர் பெருமக்களிடம் கேட்டுக் கொண்டே இருப்பாயானால் அவை தானாக நிகழும். அவ்வாறு இல்லையென்றால் எப்பொழுதும் கடினம்தான்!

 

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய

வாயின ராத லரிது. – 419; - கேள்வி


நுணங்கு = நுண்மை, நுட்பம்; நுணங்கிய கேள்வியர் அல்லார் = நுட்பமான அறக் கருத்துகளை அறிஞர் பெருமக்களிடம் கேட்டு உள்வாங்கிக் கொள்ளாதவர்கள்; வணங்கிய வாயினர் ஆதல் அரிது = பணிவுடன் இன்சொல் பேசுதல் இயலாது.


நுட்பமான அறக் கருத்துகளை அறிஞர் பெருமக்களிடம் கேட்டு உள்வாங்கிக் கொள்ளாதவர்கள் பணிவுடன் இன்சொல் பேசுதல் இயலாது.

கற்றிலன் ஆயினும் கேட்க! எளிதான கருத்து!


இருப்பினும், நாம் ஒரு கருத்தினைக் கேட்க ஆரம்பிக்கும் பொழுதே எதிர்க் கேள்விக் கனைகளையல்லாவா சிந்தித்துச் சீரழிகிறோம். – உங்களைச் சொல்லலைங்க. எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். இந்த எதிர் மனம் எப்பொழுது அடங்குமோ?


இந்தத் திருக்குறள் தொடரே எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் முயற்சி என்பதனை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்கிறேன்.


நம் பேராசானுக்கு கோபம் வந்துவிட்டால் அவ்வளவுதான்! அதற்கு உதாரணமாக இருப்பதுதான் முத்தாய்ப்பாகவரும் முடிவுரை! இந்தக் குறளை நாம் முன்பே சிந்தித்துள்ளோம். காண்க 18/01/2024. மீள்பார்வைக்காக:


செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினு மென். – 420; - கேள்வி


மனிதம் கொன்று உணவாய்த் தின்று உலவும் மாக்கள் அழிந்தால்தான் என்ன?


நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page