top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

குடிப்பிறந்து ... 502, 793, 794, 681, 952, 953

30/11/2022 (636)

இன்று ஒரு மீள் வாசிப்பாகவே அமைந்துவிடும் என்று எண்ணுகிறேன்! – மிகவும் நீ...ண்ட பதிவு. நேரத்தையும் ஒதுக்கி வாசிக்க வேண்டும்! -எச்சரிக்கை


“குடி” என்றால் என்ன என்பதை நாம் முன்பொருமுறை பார்த்துள்ளோம். காண்க 23/07/2022 (512).


இல்லத்தை சுருக்கமாக (abbreviation) ‘இல்’ என்று குறிக்கிறார்கள். ஒரு சமுதாயத்தின் அடிப்படை அலகு(unit) இல்லம் அல்லது குடும்பம்.

மனிதர்கள் தனிப்பட்ட முறையில் இணைந்து வாழ்வது குடும்பம். பல குடும்பங்கள் சேர்ந்தது குடி; பல குடிகளை உள்ளடக்கியது குலம். பல குலங்களை உள்ளடக்கியது நாடு … இப்படி விரிகிறது.


நம் பேராசான் எதற்கெடுத்தாலும் “நல்ல குடிப் பிறப்பு” முக்கியம் என்கிறார். நட்பு வைத்துக் கொள்ள வேண்டுமா? நல்ல குடியில் வைத்துக் கொள் என்கிறார். இந்தக் குறளும் நாம் பார்த்ததுதான். காண்க 14/12/2021 (294), 15/12/2021 (295).


குணனும் குடிமையும் குற்றமும் குன்றா

இனனும் அறிந்துயாக்க நட்பு.” --- குறள் 793; அதிகாரம் – நட்பாராய்தல்


குடிப்பிறந்து தன் கண் பழிநாணு வானைக்

கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.” --- குறள் 794; அதிகாரம் – நட்பாராய்தல்


குடிப்பிறந்து தன் கண் பழிநாணு வானைக் = முன் சொன்ன நான்கின் வழித்தோன்றி மேலும் தன்னிடம் ஏதாவது பழி வந்து ஒட்டிக்கொள்ளுமோ என்று அஞ்சுபவனின்; நட்பு = நட்பை; கொடுத்தும் கொளல்வேண்டும் = நாம் எதையும் விட்டுக் கொடுத்து கொள்ள வேண்டும்.


தூது செல்ல ஒருவரை நியமிக்க வேண்டுமா? அதற்கும் வேண்டும் குடி! காண்க 03/10/21 (222).


அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்

பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.” --- குறள் 681; அதிகாரம் - தூது


அன்புடைமை = தன் சுற்றத்திடம் அன்பு; ஆன்ற குடிப்பிறத்தல் = குறையில்லா குடும்பத்தில் பிறந்திருத்தல்; வேந்தவாம் பண்புடைமை = அரசனே (தலைமை) அவாவும், விரும்பும் தகுதி; தூதுரைப்பான் பண்பு = தூது செல்பவர்களுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத பண்புகள்.


ஔவை பிராட்டியார் சொன்னதும் நமது கவனத்திற்கு வரும். காண்க 22/09/2021 (211)


...கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே

கூடுதலே கோடி பெறும்;...


இப்படி குடிமையின் முக்கியத்துவத்தை பல அறிஞர் பெருமக்களும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.


சரி, இந்தக் குடிப்பிறப்பு பிறப்பினால் வருவதா என்றால் அதுதான் இல்லை என்றும் பார்த்திருக்கிறோம். பழக்க வழக்கத்தால் வருவது. சரி நல்ல குடியாக மாற என்னென்ன பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்? காண்க 24/07/2022 (513).


ஓழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்

இழுக்கார் குடிப்பிறந்தார்.” --- குறள் 952; அதிகாரம் – குடிமை


இழுக்கார் = கை விடார்.

நல்ல குடியில் இருக்கனுமா, இந்த ஒழுக்கம், வாய்மை, நாணம் என்ற மூன்று பண்புகளையும் கை விட்டுடாதீங்க என்கிறார்.


அதாவது, மனம், மொழி, மெய்களில் சுத்தம் இருக்க வேண்டும் என்கிறார். அதுதான் குடிமைக்கு அழகு.


அவர்களுக்கு மேலும் என்னென்ன பண்புகள் இருக்கும் என்பதை குறள் 953 ல் தெரிவிக்கிறார். இதையும் நாம் சிந்தித்துள்ளோம். காண்க 06/09/2021 (195).


நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும்

வகைஎன்ப வாய்மைக் குடிக்கு.” --- குறள் 953; அதிகாரம் - குடிமை


வாய்மைக் குடிக்கு = வாய்மை பொருந்திய குடிக்கு; நகை = ஒருவர் உதவி நாடி வரும்போது முகமலர்ச்சியும்; ஈகை = இருப்பதை கொடுத்து உதவுதலும்; இன்சொல் = இனிய சொற்களைப் பேசுதலும்; இகழாமை = அவர்களை எள்ளி நகையாடாமல் இருப்பதும்; நான்கும் வகை என்ப= ஆகிய நான்கு பண்புகளையும் கொண்டிருத்தல் என்பர் பெரியோர்.


சரி, இன்றைய குறளுக்கு வருவோம். இதற்கு மேல்தான் special itemஏ இருக்கு! தொடர்ந்து படியுங்கள்.


ஒருவரை பணிக்கு அமர்த்த வேண்டுமா? அதற்கும் நல்ல குடிப்பிறப்பு என்கிறார்.


குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்

நாணுடையான் கட்டே தெளிவு.” --- குறள் 502; அதிகாரம் – தெரிந்து தெளிதல்


வடு = பழி; பரியும் = அஞ்சும்;

குடிப்பிறந்து = நல்ல குடியில் பிறந்து; குற்றத்தின் நீங்கி = அப்படி பிறந்துவிட்டாலும், குற்றங்களில் இருந்து நீங்கி; வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு = தம்மால் ஒரு பழி வந்துவிடுமோ என்று அஞ்சி வெட்க்கப்படக் கூடியவனை கண்டுபிடி.


நல்ல குடியில் பிறந்து,அப்படி பிறந்துவிட்டாலும், குற்றங்களில் இருந்து நீங்கி, மேலும், தம்மால் ஒரு பழி வந்துவிடுமோ என்று அஞ்சி வெட்கப்படக் கூடியவனை கண்டுபிடி.


நல்ல குடியில் பிறந்தால் மட்டுமே போதாது. அவனும் நல்லவனாக இருக்க வேண்டும்.


சரி, அவன் மட்டும் நல்லவனாக இருந்தால் போதாதா என்றால் போதும்தான். ஆனால், நெருக்கடியான காலங்களில் அவன் பிறழும் போது அவனை அவனது குடி சரி செய்யும். மேலும், அவனின் குடியால் அவனுக்கும் ஒரு நெருக்கடி வராது.


உனது நண்பர்களைக் காண்பி. உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்கிறார்களே அது போல! “You become who you hang with”.


‘நாற்காலி’யைப் போல ‘குடிப்பிறப்பு’ என்பதும் காரணப் பெயர்.

ஒரு கால் இல்லாவிட்டால் நாற்காலி முக்காலியாகி மூலைக்கு போய்விடும்!


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்


பி.கு.: இது வரை நீங்கள் வாசித்துக் கொண்டிருந்தால் பாராட்டுகள். உங்கள் குறள் ஆர்வத்திற்கும், பொறுமைக்கும் எல்லை இல்லை. இன்றுமுதல் நீவீர் "குறள் ஆர்வலர்" மற்றும் “பொறுமையின் திலகம்” என்று அழைக்கப்படுவீர்களாக!



Comments


Post: Blog2_Post
bottom of page