26/07/2021 (153)
அன்பிற்கினியவர்களுக்கு:
அடிக்கிற கைதான் அணைக்கும்!
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. - 15; - வான் சிறப்பு
கெடுப்பதூஉம் = வாழும் உயிர்களை, மழை பெய்யாமல் நின்று கெடுக்கும்; கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே எடுப்பதூஉம் = அவ்வாறு பாதிப்பு அடைந்தவர்களுக்கு ஆறுதலாக மழை அதே போன்று மறுபடியும் பெய்து மேலே தூக்கிவிடுவதும்; எல்லாம் மழை = எல்லாம் வல்லது மழை; எடுப்பது = மேலே தூக்கி விடுவது.
வாழும் உயிர்களை, மழை பெய்யாமல் நின்று கெடுக்கும். அவ்வாறு பாதிப்பு அடைந்தவர்களுக்கு ஆறுதலாக மழை அதே போன்று மறுபடியும் பெய்து மேலே தூக்கிவிடுவதும் எல்லாம் வல்லது மழை.
ஆசிரியர்: மழை பெய்யாது விட்டால் பூமியில் மக்கள் வாழ இயலாது… மழை பெய்யாது கெடுக்கும். அதே மழை பெய்து வளமும் சேர்க்கும் …
நம்மாளு: ஐயா! ஒரு சந்தேகம். பெய்யாது விட்டால் கெடுக்கும் சரி. ஆனால் பெய்தும் கெடுக்கிறதே? அதனையும் சேர்த்துக்கலாம் இல்லையா?
ஆசிரியர்: அவ்வாறு இயலாது. ஏன் என்றால், உலகிலே பல்வேறுபட்ட உயிரினங்கள் இருக்கு. அது அதற்கு மழை வெவ்வேறு அளவிலே தேவைப்படும். இலேசா தூறல் போட்டால் சில புல்லினங்கள் பிழைத்துக் கொள்ளும். சிலவற்றிற்கு, ஒரு மழையாய் இருந்தாலும் பெரு மழையாகத் தேவைப்படும். அந்த மாதிரி பெருமழை பெய்யும் போது சில உயிரினங்கள் அழியலாம். இருந்தாலும், எந்த ஒரு மழையினாலும் பயன் உண்டு. ஆனால், பெய்யாமல்விட்டால்தான் அனைத்தும் அழியும். அதனால், ‘கெடுப்பதூஉம்’ என்பதற்கு மழை பெய்யாமல் விட்டால் என்று பொருள் கொள்ள வேண்டும்.
நம்மாளு: நன்றி ஐயா. இன்னும் ஒரு சந்தேகம். ‘மற்று ஆங்கே’ கொஞ்சம் விளங்கலை. அதுக்கு எப்படிப் பொருள் எடுப்பது?
ஆசிரியர்: ‘மற்று’ என்பது அதுவரை நிகழ்ந்தது மாறப்போகிறது என்பதை உணர்த்த பயன்படும் இடைச்சொல.
நம்மாளு: (மைண்ட் வாய்ஸ் - பிளேட்டை திருப்பிப் போடப்போறாங்க போல …)
ஆசிரியர்: ‘ஆங்கே’ என்பதற்கு ‘அது போல’ என்று பொருள். ‘மற்று ஆங்கே’ என்பதற்கு எப்படிப் பெய்யாது கெடுத்ததோ அது போல் (அல்லாமல்) பெய்தும் கொடுக்கும் என்று பொருள் கொள்ள வேண்டும்.
நம்மாளு: ஐயா, ஏன் ‘கெடுப்பதூஉம்’ ‘எடுப்பதூஉம்’ என்று வருது? கெடுப்பதும், எடுப்பதும் – ன்னு வந்தாலும் பொருள் சரியாதானே இருக்கும்?
ஆசிரியர்: பொருள் மாறிவிடாது என்பது சரிதான். ஆனால், நம் பேராசான் எதற்கு அந்த மாதிரி சொல்லியிருக்கிறார் என்றால் கெடுப்பதும், எடுப்பதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது அல்லவா? அந்தத் தொடர் நிகழ்வினை வெளிப்படுத்த வேண்டி அப்படி அமைக்கிறார். இது இன்னிசை அளபெடை. இது ஓசை நயத்தைக் கூட்டி அந்தச் சொற்களின் பொருளை இங்கே ஆழப் படுத்துகிறது.
நம்மாளு: மிக்க நன்றி ஐயா.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments