28/02/2023 (726)
சோம்பியிருந்தால் “குடி மடியும் தன்னினும் முந்து” என்றார் குறள் 603ல்.
சரி, குடி மடிந்தால் அத்தோடு முடிந்ததா என்றால் அதுதான் இல்லை!
குடி மடிந்தால் குற்றம் பெருகுமாம். இந்த அதிகாரங்களெல்லாம் தலைமைக்குச் சொன்னவைகளாக இருந்தாலும்கூட தனி மனிதர்களுக்கும் பொருந்துவனவே.
இந்தக் குறளை நாம் ஏற்கனவே ஒரு முறை பார்த்துள்ளோம். காண்க 20/03/2021 (62) மீள்பார்வைக்காக:
“குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு. “---குறள் 604; அதிகாரம் - மடியின்மை
மாண்ட உஞற்றிலவர்க்கு = சிறந்த பெருமுயற்சி எடுக்காதவங்க; மடிமடிந்து = சோம்பலினாலே சோம்பிக்கிடந்து; குடிமடிந்து = தான் மட்டுமில்லாம தன் குடிப் பெருமையும் கெடுத்து; குற்றம் பெருகும் = தப்பு தண்டா பண்றா மாதிரி ஆயிடும்.
சிறந்த பெருமுயற்சி எடுக்காதவங்க, சோம்பலினாலே சோம்பிக்கிடந்து, தான் மட்டுமில்லாம, தன் குடிப் பெருமையும் கெடுத்து, தப்பு தண்டா பண்றா மாதிரி ஆயிடும்!
உஞற்று என்றால் முயற்சி என்று பொருள் என்றும் பார்த்துள்ளோம். உஞற்றிலவர் என்றால் முயலாதவர்கள் என்றும் பார்த்தோம். இந்த அதிகாரத்தில் இரு குறள்களில் ‘உஞற்றிலவர்’ என்று குறிக்கிறார் நம் பேராசான்.
உழைக்கும் பருவத்தில் உழைக்காமல் இருந்தால் பிற்பகுதியில் கடுமையான வேலைகளை செய்ய வேண்டி வருமாம், அது மட்டுமில்லை. மற்றவங்க கண்டபடி திட்டவும் செய்வாங்களாம். இந்த 607ஆவது குறளையும் நாம் பார்த்துள்ளோம். காண்க 21/03/2021 (63):
“இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.” --- குறள் 607; அதிகாரம் – மடியின்மை
மாண்ட உஞற்றி லவர் =பெரு முயற்சி எடுக்காம இருப்பவர்கள்; மடிபுரிந்து = சோம்பித் திரிந்து; இடிபுரிந்து = மற்றோர் இடும் கடுமையான ஏவல்களை செய்வது மட்டுமல்லாமல்; எள்ளும்சொல் கேட்பர் = வசைச் சொற்களுக்கும் ஆட்படுவர்
சோம்பித் திரிந்து பெரு முயற்சி எடுக்காம இருப்பவர்கள் மற்றோர் இடும் கடுமையான ஏவல்களைச் செய்வது மட்டுமல்லாமல் வசைச் சொற்களுக்கும் ஆட்படுவர்.
இந்தக் குறள்களை ஒட்டியுள்ளச் செய்திகளை ஒரு எட்டு எட்டிப் போய் கொஞ்சம் படிக்கனும் போல இருக்கு. ரொம்ப நாளாயிட்டுதில்லையா?
ஏன் என்றால் ‘மறவி’, அதாவது மறதியைப் பற்றிதான் அடுத்துச் சொல்கிறார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments