top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

குடியென்னும் ... 601, 602

26/02/2023 (724)

குடி என்பது வாழையடி வாழையாகத் தொடர்வது. குடியை குன்றா விளக்கம் அதாவது அணையா விளக்கு என்கிறார் நம் பேராசான். அதாவது, நாம் மேன்மேலும் அதை செம்மை படுத்திக்கொண்டே செல்ல வேண்டும். தொன்மை, மேன்மை என்பன தொடர்ச்சியில் உள்ளது.


வானூர்தி (Aeroplane) பறக்கத் தொடங்கிவிட்டதே என்று எரிபொருளை அனைத்து விடக்கூடாது! அதாவது, சோம்பியிருக்கக் கூடாது. அப்புறம் பார்க்கலாம் (procrastination) என்பது சோம்பலுக்கு (idleness) வழி வகுக்கும்.


குந்தித்தின்றால் குன்றும் மாளும்! அதாவது, மலைபோல முன்னோர்கள் சேர்த்து வைத்திருந்தாலும் அனைத்துமே காணாமல் போகும். தின்றல் என்பது உண்பது மட்டுமல்ல!


குடியைக் கெடுப்பது மடி என்கிறார். மடியென்பது மாசு போலவாம். ஒரு சில நாட்களில் அதன் விளைவு தெரியாது. பல நாட்கள் கழித்துப் பார்த்தால் மாசு நன்றாக அப்பியிருக்கும்.


குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்

மாசுஊர மாய்ந்து கெடும்.” --- குறள் 601; அதிகாரம் – மடி இன்மை


ஊரல் = ஊறுதல் (creeping), படர் தாமரை, தேமல், தினவு, பெருகுதல்; மாய்ந்து = குன்றி


மடியென்னும்மாசு ஊர = சோம்பல் என்ற மாசு படிய; குடியென்னும் குன்றா விளக்கம் மாய்ந்து கெடும் = வழி வழியாக வரும் குடியென்னும் அணையா விளக்கு, கொஞ்சம் கொஞ்சமாக மாசு தொடர்ந்து படிந்து பின் ஒளியில்லாமல் போகும்.


சோம்பல் என்ற மாசு படிய படிய; வழி வழியாக வரும் குடியென்னும் அணையா விளக்கு, கொஞ்சம் கொஞ்சமாக மாசு தொடர்ந்து படிந்து பின் ஒளியில்லாமல் போகும்.


மடியென்பது ஒரு சத்தமில்லாக் கொலைஞன் (silent killer); உடனிருந்தே கொல்லும் வியாதி!


சரி என்ன செய்யனும்?

மடியை மடியாகவே கருதனுமாம்! இது எப்படி இருக்கு என்றால் நெருப்பை நெருப்பாகவே கருதனும் என்பது போல என்கிறார் பரிமேலழகப் பெருமான். அதாவது, ஓய்வு என்று விளக்கம் சொல்லித் தூங்கிவிடக் கூடாது என்கிறார்.


மடியை மடியா ஒழுகல் குடியைக்

குடியாக வேண்டு பவர்.” --- குறள் 602; அதிகாரம் – மடி இன்மை


குடியைக் குடியாக வேண்டுபவர் = தம் குடியை மேலும் உயர்த்த முயலுபவர்கள்;

மடியை மடியா ஒழுகல் = மடியை மடியாகவே கருதி முயற்சியைக் கைவிடாது ஒழுக வேண்டும்


தம் குடியை மேலும் உயர்த்த முயலுபவர்கள்; மடியை மடியாகவே கருதி முயற்சியைக் கைவிடாது ஒழுக வேண்டும்.


பிறிதொரு விளக்கம்:


‘மடியா’ என்பதனை வினையெச்சமாக்கி மடி செய்தலை மடித்து என்று பொருள் கொண்டு, அதாவது விலக்கி ஒழுகுக என்கிறார் மணக்குடவப் பெருமான்.

ஆக மொத்தம், மடி குடியைக் கெடுக்கும்!


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)






Comments


Post: Blog2_Post
bottom of page