24/02/2024 (1085)
அன்பிற்கினியவர்களுக்கு:
தோழியின் ஆறுதல் வார்த்தைகளைக் கேட்க முடியாமல் புலம்புகிறாள் அவள்.
நாளின் சிறுபொழுதுகள்: காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை. காலையின் வரம்பு எதுவென்றால் நண்பகல் தொடக்கம். மாலைக்கு எல்லை யாமத்தின் தொடக்கம். யாமம் என்றால் நடு இரவு.
அவர் என்னுடன் இல்லை. காலையில் இருந்து சிறு பொழுதுகளின் காலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கழிகின்றன. இதோ, முல்லை மலர்கின்றன. கதிரவன் சினம் தணிகிறான். ஆனால் எனக்கோ துன்பம்தான். இந்தத் துன்பகரமான மாலைப் பொழுதே கடல் போல நீண்டு நெடிய காலமாக இருக்கின்றது. இந்த மாலைப் பொழுதென்னும் கடலை எப்பாடுபட்டாயினும் நீந்திக் கடந்தாலும், ஐயகோ, அதன் எல்லையில் இரவு ஆரம்பிக்கிறது. இரவில் பொங்கும் வெள்ளம் போன்ற துன்பம் இந்தக் கடலைவிடப் பெரிதாகி என்னைச் சிதறடிக்கின்றதே! என்ன செய்வேன்?
இந்தக் கற்பனைக்குச் சொந்தக்காரர். கங்குல் வெள்ளத்தார்! கங்குல் என்றால் இரவு. குறுந்தொகையில் ஒரு பாடலில் கங்குல் வெள்ளத்தார் இவ்வாறு தெரிவிக்கிறார். (பாடலை வைத்துப் பெயர் பெற்றார் புலவர்)
எல்லை கழிய முல்லை மலரக்
கதிர்சினந் தணிந்த கையறு மாலையும்
இரவரம் பாக நீந்தின மாயிவன்
எவன்கொல் வாழி தோழி
கங்குல் வெள்ளங் கடலினும் பெரிதே. – பாடல் 387; கங்குல் வெள்ளத்தார், குறுந்தொகை
சரி, நாம் குறளுக்கு வருவோம்.
கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா. – 1169; - படர் மெலிந்து இரங்கல்
கொடியார் கொடுமையின் = என்னைப் பிரிந்து சென்று என்னவர் செய்யும் கொடுமைகளுடன்; இந்நாள் நெடிய கழியும் இரா தாம் கொடிய = இந்த நாளின் பொழுதுகளும் சீக்கிரம் கழியாமல், குறிப்பாகப் பெரும் துன்பம் தரும் இந்த இராக் காலம் கழியாமலே இருப்பது கொடிதிலும் கொடிது.
என்னைப் பிரிந்து சென்று என்னவர் செய்யும் கொடுமைகளுடன், இந்த நாளின் பொழுதுகளும் சீக்கிரம் கழியாமல், குறிப்பாகப் பெரும் துன்பம் தரும் இந்த இராக் காலம் கழியாமலே இருப்பது கொடிதிலும் கொடிது.
அவள்:
தோழி, “வாயு வேகம், மனோ வேகம்” என்று ஒரு பழமொழி இருக்கிறது. அஃதாவது, நம் மனம் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்குச் சென்று திரும்பும்! அது போல என் கண்களுக்கு நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்திற்கு நீந்திச் செல்லும் திறன் இருந்தால் இந்நேரம் இந்தப் பொங்கு மாக்கடலின் வெள்ளத்தை நீந்திக் கடந்து அவர் இருக்கும் இடம் சென்றிருப்பேன்!
உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோவென் கண். – 1170; - படர் மெலிந்து இரங்கல்
உள்ளம் போன்று உள்வழிச் செல்கிற்பின் = உள்ளத்தைப் போல நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்குச் செல்லும் திறன்; என் கண் வெள்ள நீர் நீந்தல மன்னோ = என் கண்களுக்கு (உடலுக்கு) இருப்பின், இந்தத் துன்பமென்னும் பொங்கு மாக்கடலின் வெள்ளத்தை நீந்திக் கடந்து அவருடன் சேராமல் ஒழிவேனோ?
உள்ளத்தைப் போல நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்குச் செல்லும் திறன், என் கண்களுக்கு (உடலுக்கு) இருப்பின், இந்தத் துன்பமென்னும் பொங்கு மாக்கடலின் வெள்ளத்தை நீந்திக் கடந்து அவருடன் சேராமல் ஒழிவேனோ?
தொடர்வோம் நாளை. நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments