14/06/2023 (832)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
நாட்டிற்கு கேடு என்றால் என்னவென்றே தெரியக் கூடாதாம்! முதல் பாடலில் ‘தாழ்விலாச் செல்வம்’ என்றார். அதாவது, கேடுகள் இல்லாத செல்வம் என்றார். இரண்டாம் பாடலில் ‘அரும் கேட்டால் ஆற்ற விளைவது’ என்றார். அதாவது கேடுகள் இல்லாமல் என்றார்.
மூன்றாம் பாடலில் ‘பொறை ஒருங்கு மேல் வரும்கால் தாங்கி’ என்றார். அதாவது, நாட்டிற்குச் சுமைகள் மொத்தமாக வந்தாலும் அதைத் தாங்கி என்றார்.
நான்காம் பாடலில், மேலும் கேடுகளைப் பட்டியலிட்டார். அதாவது உறு பசியும், ஓவாப் பிணியும், செறு பகையும் இல்லாமல் இருப்பது நாடு என்றார்.
ஐந்தாம் பாடலில் உள்ளிருந்தே கொல்லும் கேடுகளை வரிசைப் படுத்தினார். அதாவது, ‘பல் குழுவும், பாழ் செய்யும் உட் பகையும் வேந்தலைக்கும் கொல் குறும்பும் இல்லது நாடு’ என்றார்.
அடுத்து, ஆறாம் பாடலில் மேற் சொன்ன கேடுகள் என்வென்றே தெரியாமல் ஒரு நாடு இருக்க வேண்டும். சில சமயம் அந்தக் கேடுகள் தவிர்க்க இயலாத காரணத்தால் அந்த நாட்டினைப் பாதித்தால் அந்தச் சமயத்திலும் வளங்கள் குறையாமல் இருக்கும் நாடே நாடுகளுக்கு எல்லாம் முதன்மை என்கிறார்.
முதல் ஆறு பாடல்கள் மூலம் நாட்டினது இலக்கணம் சொன்னார். அதாவது, நாடு என்பது வளங்களை உருவாக்க வேண்டும், காக்க வேண்டும், வாழ்க்கைத் தரத்தை எந்நாளும் உயர்த்தும் வகையில் இருத்தல் வேண்டும்.
இன்னும் சுருக்கமாகச் சொன்னால் இருக்க வேண்டியது வளங்கள். இருக்கக் கூடாதன கேடுகள், கேடிகள்! இது நாட்டிற்கும் வீட்டிற்கும் பொருந்தும்.
“கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.” --- குறள் 736; அதிகாரம் – நாடு
கேடறியா = கேடுகள் என்வென்றே அறியாத; கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடு = அப்படியே கேடுகள் வந்துற்றாலும் அதனால் வளங்களுக்கு எந்த பெரும் பாதிப்புகள் இல்லாமலும் இருக்கும் நாடு; நாட்டின் தலை என்ப = நாடுகளுக்கெல்லாம் தலை சிறந்த நாடு என்பர் சான்றோர்.
கேடுகள் என்வென்றே அறியாத, அப்படியே கேடுகள் வந்துற்றாலும் அதனால் வளங்களுக்கு எந்த பெரும் பாதிப்புகள் இல்லாமலும் இருக்கும் நாடு நாடுகளுக்கெல்லாம் தலை சிறந்த நாடு என்பர் சான்றோர்.
கேடுகள் இல்லாமல் வளங்கள் பெருக வேண்டும். போகும் பாதையும் முக்கியம்; போகும் இடமும் முக்கியம்! எப்படியாவது எட்டிப் பிடி என்பதல்ல நாடு. வீட்டிற்கும் அஃதே!
ஊரை அடித்து உலையில் வை என்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் கொலை. அதாவது, தற்கொலை.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments