24/08/2023 (902)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
பகைவர்கள் எதிரிகளிடம் எதிர்பார்க்கும் குணங்களைக் கூறிக் கொண்டுவருகிறார் பகை மாட்சியில். அந்த வகையில் மேலும் இரு குணங்களைச் சொல்கிறார்.
சினத்தில் இரு வகை இருக்கிறது. ஒரு வகை: எந்த ஒரு காரணமும் இல்லாமல் எப்போதும் கோபத்தோடே இருப்பது. இவனை “வெகுளி நீங்கான்” என்றார். மற்றொரு வகை: காரண காரியங்களை ஆராயாமல் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டுக் கண்மூடித்தனமாக கோபம் கொள்வது. இவனை “காணாச் சினத்தான்” என்கிறார்.
அந்த உணர்ச்சிகளுக்கு அடிப்படை இல்லாமை, இயலாமை, பொறாமை, முயலாமை முதலியன. இவைகளுக்கு அடிப்படைக் காரணம் எதுவென்றால் கட்டுக்கடங்கா பேராசை! அப்படி இருப்பவனை “கழி பெரும் காமத்தான்” என்கிறார்.
காணாச் சினத்தானையும் கழி பெரும் காமத்தானையும் பகைவர்கள் வாங்க வாங்கவென்று வரவேற்பார்களாம்.
“காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.” --- குறள் 866; அதிகாரம் – பகை மாட்சி
காணாச் சினத்தான் = காரண காரியங்களை ஆராயாமல் கோபம் கொள்பவன்; கழிபெருங் காமத்தான் = பேராசைக் கொண்டவன்; (நட்பு) பேணாமை = பகைமை; பேணப்படும் = (பகைவர்களால்) விரும்பப்படும்.
எதிராளிகளிடம் காண வேண்டிய குணங்களை குறள் 862 முதல் 866 முடிய எடுத்துச் சொன்னார்.
இதனைத் தொடர்ந்துதான், அடுத்துக் கெடுப்பனை பகைவனாக ஆக்க கொடுத்தும் கொளல் வேண்டும் என்றார். காண்க 16/12/2021 (296), 10/05/2022 (438).
குணம் கெட்டவன் குற்றம் செய்வான்; குற்றம் செய்தால் சுற்றம் இல்லை. அதுதாங்க, அவனைத் தாங்க இனம் இருக்காது.
சரி, அதனாலே என்ன இப்போது? என்று கேட்கிறீர்களா?
அவனை மாதிரி ஆளுங்கதாம் பாதுகாப்பாம்! இது என்ன புது குழப்பம் என்று நினைக்கத் தோன்றும்.
குழப்பித் தெளிவிப்பது எம்பிரான் வள்ளுவப் பெருந்தகை!
இந்த மாதிரி ஆளுங்கதாம் பகைவர்களுக்குப் பாதுகாப்பாம்! என்ன ஒரு கிண்டல் பாருங்க!
“குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்
கினனிலனாம் ஏமாப் புடைத்து” --- குறள் 868; அதிகாரம் - பகைமாட்சி
குணன் இலனாய் = நல்ல குணங்கள் இல்லாதவனாய்; குற்றம் பலவாயின் = அதனால் பல குற்றங்கள் அவனிடம் பெருகிவிட்டால்; இனன் இலனாம் = அவனுக்குத் துணையாக யாரும் இருக்க மாட்டார்கள்; மாற்றார்க்கு
ஏமாப்பு உடைத்து = ஆதலினால், அவனே பகைவர்களுக்குப் பாதுகாப்பு.
நல்ல குணங்கள் இல்லாதவனாய், அதனால், பல குற்றங்கள் அவனிடம் பெருகிவிட்டால், அவனுக்குத் துணையாக யாரும் இருக்க மாட்டார்கள்.
ஆதலினால், அவனே பகைவர்களுக்குப் பாதுகாப்பு.
அதுதாங்க அவன்தான் பகைவர்களுக்குத் தொக்கு! “ரொம்ப நல்லவனா இருக்கான். எவ்வளவு அடித்தாலும் தாங்குவான்” என்று அவனை முன்னிறுத்தி அவர்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள்.
ஆகையினால், நல்ல குணம் வேண்டுக; குற்றம் தவிர்க்க; சுற்றம் சேர்க்க!
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments