01/11/2021 (251)
ஒரு செய்தியில் தெளிவு பிறக்க நான்கு நிலைகள் இருக்கின்றன. முதலில் அச் செய்தியைக் காண்பது. பின் அதைக் குறித்து பேசுவது. அதனை அடுத்து அதனைக் குறித்து கேட்பது. இறுதியாக சிந்தித்து தெளிவு பெறுவது.
காண்டல், செப்பல், கேட்டல், சிந்தித்தல்…
இது எல்லாம் ஒரே இடத்திலேயே நிகழ்ந்தால் எப்படி இருக்கும்?
ஆங்கேதான் குரு வருகிறார். முன்பொரு நாள் குருவைப் பற்றி சொன்னதை ஆசிரியர் தொடர்ந்தார்.
குருவின் சன்னிதானத்தில் எல்லாம் நிகழும். சன்னிதானம் என்றால் ‘அருகில்’ என்று பொருள். சன்னிதானம் என்ற வார்த்தைக்கு தன்னில் தான் ஆவது என்கிறார்கள் மொழி அறிஞர்கள்.
பல சமயம், நம்ம சந்தேகங்களை தீர்க்க யாரையாவது நாடுவோம். அவர்கள் பக்கத்தில் செல்லும் நேரத்தில், நமக்கே பதில் கவனத்திற்கு வந்துவிடும். அதுதான் சன்னிதானம்.
சரி, திருமூலத் தெய்வம் சொன்னதைப் பார்க்கலாம்.
“தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே!” --- திருமூலர் - திருமந்திரம்
அந்த குரு எப்போவருவாரோ? இதான் கேள்வி.
குரு என்பவர் வேறு யாருமல்ல. விழிப்புணர்வைத் தருபவர்தான் குரு. விழிப்புணர்வு மூன்று நிலைகளில் நிகழும். ஒன்று சுயமாக நிகழும், அடுத்தது மற்றவர்கள் மூலமாக நிகழும். அதனை அடுத்து பிரபஞ்சம் மூலமாக நிகழும். (self-awareness, archaic consciousness, universal consciousness). இதற்கு நம் வியாபகத்தை விரிக்க வேண்டும். இதை மேலும் விரிக்கலாம் பின்னொரு சமயம்.
தேடிக் கொண்டே இருந்தால் குரு வெளிப்படுவார் – தெளிவு பிறந்தால் குரு கிடைத்து விட்டார் என்று பொருள். எதைத் தேட வேண்டும்? சின்ன சின்னப் பொருள் இன்பங்களை அல்ல. (அதையும் தேடலாம் – நிச்சயம் கிடைக்கும்). உண்மைப் பொருள்களைத் தேட வேண்டும்.
குருவைப் பற்றி நம்ம வள்ளுவப் பெருந்தகை ஏதாவது சொல்லியிருக்காரா? நேரடியாக இல்லை என்பதுதான் பதில்.
ஒரு குறிப்பை மட்டும் காட்டுகிறார் நம் பேராசான். அது என்னவென்று நாளைத் தொடரலாம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments